திங்கள், 30 நவம்பர், 2009

பாபர் மசூதி இடிப்பு வழக்குகள்: சட்டப்படி நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டம்

இந்து மதவெறிக் கும்பலால் பாபர் மசூதி இடித்துத்தள்ளப்பட்ட கிரிமினல் நடவடிக்கையை ஆராய லிபரான்கமிசன் டிசம்பர் 10, 1992 அன்று பாபர் மசூதி இடித்துத்தள்ளப்பட்ட நான்காவது நாளில் மைய அரசால் நியமிக்கப்பட்டது.

மூன்று மாதங்களுக்குள் அறிக்கையைத் தர வேண்டும் என்ற நிபந்தனையோடு நியமிக்கப்பட்ட இக்கமிசன், 16 ஆண்டுகள் 6 மாதங்கள் கழித்து, கடந்த ஜூன் 30, 2009 அன்றுதான் தனது அறிக்கையை மைய அரசிடம் தந்துள்ளது.



இக்கமிசனின் விசாரணைக்கு டெல்லி உயர்நீதி மன்றம் விதித்திருந்த தடை, பாபர் மசூதி இடிப்பில் நேரடியாகத் தொடர்புள்ள கல்யாண் சிங் போன்ற "சாட்சிகள்' கமிசனின் முன் விசாரணைக்கு ஆஜராகாமல் இழுத்தடித்தது போன்றவைதான் இத்தாமதத்திற்கான காரணங்களாகக் கூறப்பட்டாலும், "மசூதியை இடித்துத் தள்ளிய சதிகாரர்கள் யார்?'' என்பது உலகுக்கே தெரிந்த இந்த வழக்கு தொடர்பான விசாரணையை நடத்தி முடித்து அறிக்கை கொடுக்க, நீதிபதி லிபரானுக்கு 16 ஆண்டுகள் " தேவைப்பட்டிருப்பதை ' எந்தவிதத்திலும் நியாயப்படுத்திவிடமுடியாது.



பாபர் மசூதியை இடித்துத் தள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு நடத்தப்பட்ட அத்வானியின் ரத யாத்திரை; மசூதி இடிக்கப்படுவதற்கு முதல் நாள் பஜ்ரங் தள் தலைவர் வினய்கத்தியாரின் வீட்டில் நடந்த சதி ஆலோசனை; அதில் கலந்துகொண்ட அத்வானி உள்ளிட்ட தலைவர்களின் பங்கு; மசூதி இடிக்கப்படுவதற்கு முதல் நாள் அயோத்திக்கு வந்து உரையாற்றி விட்டு, அன்றிரவு ராமஜென்ம பூமி நியாஸின் தலைவர் பரமஹம்ஸர் வீட்டில் நடந்த "கலந்துரையாடலில்' கலந்துகொண்டுவிட்டுச் சென்ற வாஜ்பாயின் பங்கு; பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ படங்கள்; அக்கிரிமனல் நடவடிக்கையைத் தடுக்காமல், அதனை ரசித்துப் பார்த்துப் பெருமிதம் கொண்ட அத்வானி, உமாபாரதி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் பல குட்டித் தலைவர்களின் இந்து மதவெறி வக்கிரம்; சிவசேனா தலைவர் பால்தாக்கரே மற்றும் பா.ஜ.க.வைச் சேர்ந்த கல்யாண் சிங், உமாபாரதி ஆகியோர் மசூதி இடிக்கப்பட்டதை நியாயப்படுத்தி வெளியிட்ட அறிக்கைகள் மற்றும் நேர்காணல்கள் இத்துணை அசைக்க முடியாத ஆதாரங்கள் இருக்கும் பொழுது, மசூதியை இடித்துத் தள்ளிய இந்து மதவெறிப் பாசிசக் கும்பலும், அவர்களுக்குத் துணையாக நின்றவர்களும் இந்நேரம் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும்.



ஆனால், லிபரானோ மலையைக் கெல்லி எலியைப் பிடித்த கதையாக, 16 ஆண்டுகள் கழித்துதான் 27 தொகுதிகள் கொண்ட அறிக்கையைக் கொடுத்திருக்கிறார். மைய அரசோ அந்த அறிக்கையை வெளியிட "நல்ல நாள்' பார்த்துக் கொண்டிருக்கிறது. கள்வனிடமே பெட்டிச் சாவியைக் கொடுத்தது போல, பாபர் மசூதி இடிக்கப்பட்டதை வேடிக்கை பார்த்து நின்ற கயவாளி காங்கிரசு கும்பலிடம் லிபரான் அறிக்கை போய்ச் சேர்ந்திருக்கிறது. இதைவிட இந்து மதவெறிக் கும்பலுக்கு வேறு பாதுகாப்பு தேவையில்லை. பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக மையப் புலனாய்வுத் துறை நடத்தி வரும் வழக்கும் 16 ஆண்டுகளாக விசாரணை வாய்தா மேல்முறையீடு என்ற இழுத்தடிப்புகளைத் தாண்ட முடியாமல் முடங்கிப் போய்க்கிடக்கிறது.



லிபரான் கமிசனில் அரசு தரப்பு வழக்குரைஞராகப் பணியாற்றி வந்த பஞ்சாப் ஹரியானா உயர்நீதி மன்றத்தைச் சேர்ந்த மூத்த வழக்குரைஞர் அனுபம் குப்தா, "நீதிபதி லிபரான் விசாரணையின் பொழுது அத்வானிக்கு அதிகபட்ச சலுகைகள் காட்டியதாக''க் குற்றம் சுமத்தி வருவதோடு, மசூதி இடிப்பில் அத்வானியின் பங்கு குறித்து நீதிபதி லிபரானுக்கும் தனக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடே கமிசனில் இருந்து தான் விலகுவதற்குக் காரணமாக அமைந்ததாகக் கூறி வருகிறார்.



அனுபம் குப்தா அத்வானியைக் குறுக்கு விசாரணை செய்தபொழுது, "நாடு சுதந்திரமடைந்த பின் குஜராத்திலுள்ள சோமநாதர் ஆலயத்தைப் புதுப்பிக்கும் பிரச்சினையை ஜவஹர்லால் நேரு எப்படிக் கையாண்டார்'' என்பது தொடர்பாக அத்வானியிடம் கேள்வி எழுப்பியதாகவும், இந்தக் கேள்வியினால் அத்வானியை விட லிபரான் தான் அதிகப் பதற்றமடைந்ததாகவும், அதனால் அத்வானியிடம் தன்னை மன்னிப்புக் கேட்கக் கோரி லிபரான் நிர்பந்தித்தாகவும் அனுபம் குப்தா கூறி வருகிறார்.



இதே போன்று, மசூதி இடிப்பு தொடர்பான உளவுத் துறை அறிக்கையொன்றைச் சுட்டிக் காட்டி அத்வானியை, தான் குறுக்கு விசாரணை செய்தபொழுது, அத்வானி ஆத்திரமடைந்ததாகவும், அதனால், அந்தக் கேள்விக்கு லிபரான் தடை விதித்துவிட்டதாகவும் அனுபம் குப்தா கூறுகிறார். "அத்வானி, ஜோஷி ஆகியோரின் கண் முன்னே மசூதி இடிப்பு நடந்தபோதும், அவர்கள் அதற்குப் பொறுப்பல்ல; நிலைமை அவர்களின் கையை மீறிப் போய் விட்டது'' என்பது தான் பா.ஜ.க.வின் நிலைப்பாடு. இதே நிலைப்பாட்டைத்தான் லிபரான் கொண்டிருப்பதாக அனுபம் குப்தா குற்றம்சாட்டி வருகிறார்.



லிபரான் கமிசன் மீதான இக்குற்றச்சாட்டுக்கள் கிசுகிசு செய்திகளைப் போல அல்லாமல்,"அவுட் லுக்'' என்ற ஆங்கில வாரஇதழில் அனுபம் குப்தாவின் நேர்காணலாகவே வெளிவந்திருக்கிறது. இதனால், நீதிபதி லிபரான் "நடுநிலையாக' விசாரணையை நடத்தி அறிக்கை கொடுத்திருப்பாரா என்ற சந்தேகம் தவிர்க்கமுடியாமல் எழுந்துள்ளது. இந்தசந்தேகத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, நீதிபதி லிபரான் நேர்மையாகவே விசாரணையை நடத்தியிருப்பார் என்று எடுத்துக் கொண்டாலும், அதனால் என்ன விளைவு ஏற்பட்டுவிடும்?



பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து நடந்த மும்பய்க் கலவரத்தை விசாரித்து அறிக்கை அளித்த சிறீகிருஷ்ணா கமிசன்,1982இல் நடந்த மண்டைக்காடு இந்து மதவெறிக் கலவரத்தை விசாரித்து அறிக்கை அளித்த வேணுகோபால் கமிசன், 1969இல் குஜராத் அகமதாபாத்தில் இந்து மதவெறியர்கள் நடத்திய கலவரத்தை விசாரித்து அறிக்கை அளித்த ஜக்மோகன்ரெட்டி கமிசன் ஆகியவற்றுக்கு என்ன கதி நேர்ந்ததோ, அதேநிலை லிபரான் கமிசன் அறிக்கைக்கும் ஏற்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது?



லிபரான் கமிசன் அளித்துள்ள அறிக்கை ஒருபுறமிருக்கட்டும். பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக மையப் புலனாய்வுத்துறை நடத்தி வரும் இரு வழக்குகளில், ஒன்றில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, வினய் கத்தியார், அசோக் சிங்கால், கிரிராஜ் கிஷோர், வீ.எச்.டால்மியா, சந்நியாசினி ரிதம்பரா ஆகிய எட்டு பேர் மீது சதிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. இக்குற்றச்சாட்டுக்குப் பூர்வாங்க ஆதாரம் இருப்பதைக் கூடுதல் குற்றவியல் நீதிபதி ஜகதீஷ் பிரசாத் சிறீவத்ஸவா உறுதி செய்துள்ளார்.



எனினும், காலப்போக்கில் இந்து மதவெறிக் கும்பல் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டும், சட்டத்திலுள்ள ஓட்டைகளையும், தலித் "சகோதரி' மாயாவதியின் நட்பையும் பயன்படுத்திக் கொண்டும் அந்த எட்டு பேர் மீதான சதிக் குற்றச்சாட்டை உடைத்தெறிந்து விட்டது. அவர்கள் மீது இக்குற்றச்சாட்டை மீண்டும் சுமத்தி வழக்கு நடத்துவதற்கு சட்டப்படியே வாய்ப்புகள் இருந்தும்கூட, அதை காங்கிரசு உள்ளிட்டு எந்தவொரு மதச்சார்பற்ற கட்சியும் கண்டு கொள்ளவில்லை. தற்பொழுது அவர்கள் மீது மதக் கலவரத்தைத் தூண்டிவிடும்படி நடந்து கொண்டார்கள் என்ற உப்புச்சப்பில்லாத குற்றச்சாட்டுதான் சுமத்தப்பட்டுள்ளது.



இதுவொருபுறமிருக்க, பாபர் மசூதி ராமஜென்ம பூமி வழக்கு தொடர்பான 23 கோப்புகளைக் காணவில்லை என உ.பி. மாநில அரசு அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தி ஆகஸ்டு மாத இறுதிக்குள் அறிக்கை தரும்படி மையப் புலனாய்வுத் துறைக்கு உத்திரவிட்டுள்ளது, அலகாபாத் உயர்நீதி மன்றம். இந்தக் கோப்புகள் எப்பொழுது, எப்படி காணாமல் போயின என்பது கூட "மர்மமாக'த் தான் உள்ளது.



உ.பி.மாநில அரசின் மதக் கலவர தடுப்புப் பிரிவைச் சேர்ந்த சிறப்பு அதிகாரி சுபாஷ் பஹ்ன் சாத், அலுவல் வேலைதொடர்பாக தில்லிக்குச் சென்றுகொண்டிருந்த பொழுது, தில்லியில் உள்ள திலகர் பாலம் தொடர்வண்டிநிலையத்தில் மர்மமான முறையில் இறந்து போனார். சுபாஷ் சாத் இறந்துபோய் ஒன்பது ஆண்டுகள் ஓடிவிட்டன. எனினும், அவர் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டுக் கொல்லப்பட்டாரா அல்லது தடுமாறி விழுந்து இறந்து போனாரா என்பதும் மர்மமாகவே உள்ளது. லிபரான் கமிசன் விசாரணை தொடர்பான விவகாரங்களைக் கவனிக்கும் பொறுப்பு சுபாஷ் சாத்திடம்தான் இருந்துள்ளது என்பதும், அவர் "இறந்து' போன சமயத்தில் மைய அரசில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.



தற்பொழுது காணாமல் போன கோப்புகளை லிபரான் கமிசனிடம் கொடுப்பதற்காக சுபாஷ் எடுத்துச் சென்றதாகக் கூறுகிறது, உ.பி. மாநில அரசு. இது உண்மையென்றால், அந்தக்கோப்புகள் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே "தொலைந்து'போய்விட்டன என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், உ.பி. மாநில அரசோ, லிபரான் கமிசன் தனது அறிக்கையை அளித்த பிறகுதான் கோப்புகள் தொலைந்துபோன விவகாரத்தை வெளியே சொல்லுகிறது. இதனை இவ்வளவுகால தாமதமாக சொல்ல வேண்டிய பின்னணி என்ன என்பதும் மர்மமாக உள்ளது.



லிபரான் கமிசனோ தொலைந்து போய்விட்டதாகக் கூறப்படும் அந்தக் கோப்புகளை அந்தச் சமயத்தில் சுபாஷ் சாத்தை எடுத்துவரச் சொல்லி எந்த உத்தரவும் அளிக்கவில்லை எனக்கூறுகிறது. சுபாஷ் சாத் ஓடும் ரயிலில் இருந்து "விழுந்த' இடத்தைப் புலனாய்வு செய்த டெல்லி போலீசாரோ, "அந்த இடத்தில் சில வெற்றுத் தாள்களையும், அடையாள அட்டைகளையும் தவிர வேறெதுவும் இல்லை'' எனக் கூறிவிட்டனர். சுபாஷ்சாத்தின் தந்தை பிர் பஹ்ன் சாத், தனது மகன் டெல்லிக்குக் கிளம்பிச் சென்றபொழுது தன்னுடன் இத்துணை கோப்புகளை எடுத்துச் சென்றதாகத் தெரியவில்லை எனக் கூறுகிறார். பாபர்மசூதி வளாகத்தினுள் ராமபிரான் ஜெனிக்கவில்லை என்பதை நிரூபிப்பதற்கு அகழ்வராய்ச்சி நடத்தியதைப் போல, இந்தக்"காணாமல்' போன கோப்புகளைக் கண்டுபிடிக்கவும் அகழ்வராய்ச்சி நடத்த வேண்டியிருக்குமோ?



பாபர் மசூதி பிரச்சினையில் முசுலீம்களுக்கு நீதி கிடைத்துவிடக் கூடாது என்பதில் இந்து மதவெறி பாசிசக் கும்பல் குறியாக இருந்து வருவதைப் பாமரர்கள் கூடப் புரிந்து கொள்ளமுடியும். அதே சமயம், தங்களை மதச்சார்பற்றவர்களாகக் கூறிக் கொள்ளும் ஓட்டுக்கட்சிகள் மட்டுமின்றி, சி.பி.ஐ.,போலீசு, நீதித்துறை ஆகிய அரசு உறுப்புகளும் கூட இந்தவழக்கை இத்தனை ஆண்டுகளாக இழுத்தடிக்க வேண்டிய பின்னணி என்ன என்ற கேள்வியை எழுப்பும் பொழுதுதான், மதச்சார்பற்ற இந்திய அரசின் யோக்கியதையைப் புரிந்துகொள்ள முடியும். மதச்சார்பற்ற ஓட்டுக்கட்சிகளின் இரட்டைவேடத்திற்கு எதிராக மட்டுமல்ல; இந்திய அரசின் போலி மதச்சார்பின்மைக்கு எதிராகவும் மக்களைத் திரட்டி போராடினால் மட்டுமே பாபர் மசூதியை இடித்துத் தள்ளிய இந்து மதவெறிபாசிசக் கும்பலைத் தண்டிக்க முடியும்.

Read more...

கோவா குண்டுவெடிப்பும் “இந்துக்களின்” கள்ள மௌனமும்!

தீபாவளிக்கு முதல் நாள் அக்டோபர் 16 அன்று கோவா மாநிலத்திலுள்ள முக்கியமான வர்த்தக நகரான மார்காவோவின் மையப் பகுதியில் இரு சக்கர வாகனமொன்றில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இக்குண்டு வெடிப்புக்குக் காரணமான சதிகாரர்கள் யார் என்பது இந்நேரம் தெரியாமல் போயிருந்தால், முசுலீம் தீவிரவாதிகளைக் குற்றஞ்சுமத்தி போலீசும்,தேசியப் பத்திரிகைகளும் "புலனாய்வு' நடத்தியிருப்பார்கள். கோவா சுற்றுலா மையம் என்பதால், இந்தியாவின் வளர்ச்சியை விரும்பாத பாகிஸ்தானின் சதி இது என மைய அரசும் சாமியாடியிருக்கும்.


எனினும், இக்குண்டு வெடிப்பு சம்பவத்தில் ""விதி'' வேறு மாதிரி விளையாடிவிட்டது. அந்தக் குண்டு திடீரென வெடித்துவிட்டதால், அந்தக் குண்டைத் தமது இரு சக்கர வாகனத்தில் வைத்துக் கடத்தி வந்த மால் குண்டா பாட்டீல், யோகேஷ் நாயக் என்ற இரு இளைஞர்களும் சம்பவம் நடந்த இடத்திலேயே படுகாயமடைந்து போலீசிடம் மாட்டிக் கொண்டனர். அந்த இரு இளைஞர்களும் சிகிச்சைப் பலனின்றி இறந்து போய்விட்டாலும், அவர்கள் இருவரும் ""சனாதன் சன்ஸ்தா'' என்ற இந்து மத அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகியிருக்கிறது.



அந்த இளைஞர்கள் எதற்காகக் குண்டு வைக்க வந்தார்கள் என்பது குறித்துப் பல ஊகங்கள் கூறப்படுகின்றன. எனினும், இந்தக் குண்டு வெடிப்புகளுக்குக் காரணமான குற்றவாளிகள் சனாதன் சன்ஸ்தா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது நிரூபணமாகியிருப்பதால், வேறு வழியின்றி அவ்வமைப்பின் ஆசிரமத்தைச் சோதனையிட்டுள்ள கோவா மற்றும் மகாராஷ்டிர மாநில போலீசார், அங்கு குண்டு தயாரிக்கத் தேவைப்படும் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். சனாதன் சன்ஸ்தா, ஆசிரமம் என்ற பெயரில் குண்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வந்திருப்பது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது. மேலும், இச்சோதனையின்பொழுது, இக்கும்பல் கோவாவின் சங்கோலே நெடுஞ்சாலை வழியாக வெடிகுண்டுகளைக் கடத்திச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டு, அக்குண்டுகள் வெடிப்பதற்கு முன்னதாகவே போலீசாரால் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன.



சனாதன் சன்ஸ்தா கோவாவை மையமாகக் கொண்டு இயங்கி வருவதோடு, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநில நகரங்களிலும், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் அதற்குக் கிளைகள் இருக்கின்றன; முசுலீம் வெறுப்பைக் கக்குவதற்காக தர்மசக்தி சேனா, இந்து ஜன ஜாக்ருதி சமிதி போன்ற சகோதர அமைப்புகளையும் நடத்தி வருகிறது. அறிவியல் அடிப்படையில் இந்து மதக் கருத்துக்களைப் போதிப்பதாக இந்த அமைப்பு கூறிவரும் பொய்யைப் பாமர மக்களைப் போலவே, புலனாய்வுப் போலீசும் இக்குண்டுவெடிப்பு நடைபெறும் வரை நம்பி வந்ததாகக் கூறப்படுவதுதான் நமக்கு ஆச்சரியமாக உள்ளது.



ஏனென்றால், கோவாவிற்கு அருகிலுள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த சில குண்டு வெடிப்புகளிலும், சில முசுலீம் எதிர்ப்புக் கலவரங்களிலும் சனாதன் சன்ஸ்தா அமைப்பிற்குப் பங்கு இருப்பது ஏற்கெனவே அம்பலமாகியுள்ளது. மகாராஷ்டிராவின் தானே நகரில் நடந்த ஒரு குண்டு வெடிப்புக்குப் பின், அம்மாநிலத்தின் தீவிரவாத எதிர்ப்புப் படைப் பிரிவின் தலைவராக இருந்தவரும், கடந்த ஆண்டு முசுலீம் தீவீரவாதிகள் மும்பய் நகரைத் தாக்கியபொழுது, அவர்களுடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டவருமான ஹேமந்த் கர்காரே சனாதன் சன்ஸ்தா அமைப்பைத் தடை செய்ய வேண்டும் என கடந்த ஜூன் 2008லேயே அரசுக்குப் பரிந்துரை செய்திருக்கிறார்.



கடந்த செப்டம்பர் மாதம் மகாராஷ்டிராவிலுள்ள மிரஜ் நகரில் முசுலீம் எதிர்ப்புக் கலவரம் நடந்தது. முசுலீம்கள் மீது வெறுப்பை உமிழும் துண்டுப் பிரசுரங்களை அச்சிட்டு, அவற்றை மிரஜ் எங்கும் விநியோகித்ததோடு, கடைகளை மூடச் சொல்லி ஒரு கும்பல் மிரட்டியதுதான் அக்கலவரத்தின் துவக்கப் புள்ளியாக அமைந்தது. அக்கலவரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டவர்கள் சனாதன் சன்ஸ்தா அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் என்பதை கோவா குண்டு வெடிப்புக்குப் பின் முதலாளித்துவப் பத்திரிகைகள்கூட ஆதாரங்களோடு அம்பலப்படுத்திச் செய்திகளை வெளியிட்டுள்ளன. குறிப்பாக, கோவா குண்டு வெடிப்பில் இறந்து போன மால் குண்டா பாட்டீல் மிரஜிலும், மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள மற்றொரு நகரான சங்கிலியிலும் முசுலீம் எதிர்ப்புக் கலவரங்கள் நடந்தபோது, அந்நகரங்களில் தங்கியிருந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக போலீசார் இப்பொழுது தெரிவித்துள்ளனர்.



மகாராஷ்டிராவைச் சேர்ந்த சந்தோஷ் பவார் என்றொரு நாடக இயக்குநர், மகாபாரதக் கதையை நவீன காலத்துக்கு ஏற்ப, ஒரு பீடா கடையை சொந்தமாக்கிக் கொள்ள இரண்டு நடுத்தர வர்க்கத்து குடும்பங்கள் போடும் சண்டையாக மாற்றி, ""ஆம்ஹி பச்புடே'' என்ற பெயரில் நாடகமாக உருவாக்கியிருந்தார். இந்த நாடகத்தை நடத்தக் கூடாது என இந்து மதவெறி அமைப்புகள் அந்த இயக்குநரை மிரட்டி வந்தன. இதனையும் மீறி அந்நாடகம் மகாராஷ்டிராவின் தானேயிலும், வாஷியிலும் நடைபெற இருந்த சமயத்தில், அந் நாடகம் நடக்கவிருந்த இரண்டு அரங்குகளிலும் குண்டுகள் வெடித்தன. இது தொடர்பாகக் கைது செய்யப்பட்ட நால்வரும் சனாதன் சன்ஸ்தாவின் சகோதர அமைப்பான இந்து ஜன ஜாக்ருதி சமிதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், இவர்கள் குண்டு வைப்பதற்கான சகல வசதிகளையும் சனாதன் சன்ஸ்தா அமைப்புதான் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறது என்பதும் ஏற்கெனவே மகாராஷ்டிரா போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.



இக்குண்டு வெடிப்புகளுக்கு முன்னதாக, பென் நகர நெடுஞ்சாலையில் உள்ள ஒரு மசூதியைக் குண்டு வைத்துத் தகர்க்க முயன்ற வழக்கிலும் இந்த நால்வருக்கும் தொடர்புண்டு என்பதும்; மகாராஷ்டிராவின் ரத்னகிரி பகுதியைச் சேர்ந்த ஒரு "இந்து'க் குடும்பம் கிறித்தவ மதத்திற்கு மாறியதற்காக, அவர்களது வீட்டில் குண்டு வைத்த வழக்கில் இந்த நான்கு இந்து பயங்கரவாதிகளுள் ஒருவனான மங்கேஷ் நிகம் என்பவனுக்குத் தொடர்பிருப்பதும் தெரிய வந்திருக்கிறது. இக்கும்பல், பென் நெடுஞ்சாலைப் பகுதியில் உள்ள ஒரு ஆற்றங்கரையிலும், சதாரா நகரிலும் ஜெலட்டின் குச்சிகள், குண்டுகளை வெடிக்கச் செய்வதற்குத் தேவையான மின்னணுச் சாதனங்களைப் பதுக்கி வைத்திருந்ததும் ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், செப்டம்பர் 2008இல் மகாராஷ்டிராவின் மாலேகான் நகரில் மசூதிக்கு அருகே ஆர்.டி.எக்ஸ். இரகக் குண்டுகளை வெடிக்கச் செய்த பெண் துறவி பிரக்யா சிங்கிற்கும், சனாதன் சன்ஸ்தா அமைப்பிற்கும் இடையே ஏதாவது தொடர்பிருக்கிறதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



முசுலீம் தீவிரவாத அமைப்புகள் குண்டு வெடிப்பு நடத்தியிருக்கலாம் எனச் சந்தேகப்பட்டாலே, குண்டு வெடிப்பு நடந்த பகுதியில் வாழும் ஏழை முசுலீம்களை போலீசு நிலையத்திற்கு இழுத்துப் போய், சட்டவிரோதக் காவலில் வைத்து விசாரிப்பதையும்; போதிய ஆதாரம் இல்லையென்றால் கூட, அது பற்றியெல்லாம் கவலைப்படாமல் அப்பாவி முசுலீம் இளைஞர்கள் மீது பல்வேறு கருப்புச் சட்டங்களின் கீழ் வழக்குப் போடுவதையும் எவ்விதத் தயக்கமுமின்றிச் செய்து வரும் அரசும் போலீசும், இக்குண்டு வெடிப்பு விவகாரத்தில் மிகவும் மென்மையாகவே நடந்து வருகின்றன.



சனாதன் சன்ஸ்தா பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதற்குப் போதிய ஆதாரங்கள் கிடைத்த பிறகும், அந்த அமைப்பைத் தடை செய்வதற்குப் போலீசும் அரசும் தயாராக இல்லை. சனாதன் சன்ஸ்தா அமைப்பு, தனக்குத் தேவையான வெடி மருந்துப் பொருட்களை மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்துதான் கடத்தி வந்திருக்கிறது. ஆர்.எஸ்.எஸ்.இன் சகோதர அமைப்பான பஜ்ரங் தள் மகாராஷ்டிராவிலுள்ள நாண்டேட் நகரில் நடத்திய குண்டு வெடிப்பு தொடர்பாக புலன் விசாரணை நடந்து வருகிறது.



இதன் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்.க்கும் சனாதன் சன்ஸ்தாவுக்கும் இடையிலான உறவு பற்றி விசாரணை நடத்துவது குறித்து போலீசு அதிகாரிகள் பேசவே மறுக்கிறார்கள். மார்காவோ குண்டு வெடிப்பில் இறந்து போன இரண்டு இந்து தீவிரவாதிகளின் மீது வழக்கு போட்டுள்ள போலீசார், அவ்வமைப்பைச் சேர்ந்த மற்ற நிர்வாகிகள் மீது இதுவரை ஒரு பெட்டி கேஸைக்கூடப் பதியவில்லை.



இதுவொருபுறமிருக்க, கோவாவை ஆளும் காங்கிரசு கூட்டணி அரசில் போக்குவரத்து அமைச்சராக இருக்கும் மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியைச் சேர்ந்த சுதின் தவாலிகர் குடும்பத்திற்கும் சனாதன் சன்ஸ்தா அமைப்பிற்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வருவதும் தற்பொழுது நிரூபணமாகியிருக்கிறது. சுதின் தவாலிகரின் மனைவி ஜோதி தவாலிகர் சனாதன் சன்ஸ்தா அமைப்பின் கணக்கு வழக்குகளைப் பார்க்கும் பொறுப்பில் இருந்து வருவதை, அமைச்சரே இக்குண்டு வெடிப்புக்குப் பின் ஒப்புக் கொண்டுள்ளார். ஜோதி, நாடெங்கும் குண்டுவைப்பதற்கு ஆன செலவைத் தணிக்கை செய்து வந்தாரா, இல்லை ஆன்மீக அன்பர்கள் கொடுக்கும் காணிக்கைகளை எண்ணிக் கொண்டிருந் தாரா என்பதை போலீசார்தான் சொல்ல வேண்டும்.



மதச்சார்பின்மை பேசி வரும் காங்கிரசோ, சுதின் தவாலிகரைப் பதவி விலகும்படிக் கூற மறுத்து வருகிறது. அமைச்சரோ, சனாதன் சன்ஸ்தா அமைப்பின் பயங்கரவாத நடவடிக்கைகள் அம்பலமான பிறகும், அவ்வமைப்பு இந்து மதத்திற்காகவும், தேசிய கவுரவத்திற் காகவும் செயல்பட்டு வருவதாக நற்சான்றிதழ் அளித்துள்ளார். எனவே, போலீசார் நடத்தும் விசாரணை, பூனையை மடியில் கட்டிக் கொண்டு சகுனம் பார்த்த கதையாக முடிந்து விடவும் வாய்ப்புண்டு.



முசுலீம் தீவிரவாத அமைப்புகள் பல்வேறு பெயர்களில் இயங்கி வருவதைப் போலவே, இந்து மதவெறி அமைப்புகளும் யோகா கற்றுக் கொடுக்கிறேன், மூச்சுப் பயிற்சி சொல்லிக் கொடுக்கிறேன் என்ற போர்வைக்குள் புகுந்து கொண்டு, பல்வேறு பெயர்களில் இயங்கிக் கொண்டு, ஆர்.எஸ்.எஸ்.க்கு ஆள்பிடிக்கும் வேலையைச் செய்து வருகின்றன. ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்து மதவெறி அமைப்புகள் முசுலீம் எதிர்ப்புக் கலவரங்களைத் தூண்டிவிட்டு நடத்தி, கும்பல் வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபடுவது மட்டுமின்றி, குண்டு வைத்துக் கொல்வது போன்ற பயங்கரவாத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றன என்பதும் நிரூபணமாகி வருகிறது. குண்டு வைத்துப் பொதுமக்களைக் கொல்லும் முசுலீம் தீவிரவாதிகளைக் கருணையின்றித் தண்டிக்கக் கோரும் ""இந்து'' நடுத்தர வர்க்கம், குண்டு வைப்பது உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடும் இந்து மதவெறி பயங்கரவாதிகளையும் இரக்கமின்றித் தண்டிக்கக் கோர வேண்டும். அத்தகைய நடுநிலையான போராட்டங்கள் மூலம் மட்டும்தான், ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போல இருக்கும் இந்துமுசுலீம் தீவிரவாதத்தை ஒழித்துக் கட்ட முடியும். ·

Read more...

  சங்கரமடத்தை சட்டத்தால் தண்டிக்க முடியுமா..?

பாசிச ஜெயா காலத்தில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சங்கர ராமன் கொலை வழக்கில் சங்கராச்சாரி ஜெயேந்திரன் கைதானபோது அதிர்ந்து போனது தமிழகம். சங்கராச்சாரி கொலை செய்வாரா என்ற சந்தேகத்தைக் காட்டிலும், இரு பார்ப்பன மையங்கள் மோதிக் கொண்ட அதிசயம்தான் பலருக்கும் அதிர்ச்சியைத் தந்தது.

புதிராகவும் இருந்தது. இரு மையங்களுக்கும் இடையிலான கட்டைப் பஞ்சாயத்து, பொருளாதார முரண்பாடுகள் மற்றும் பாசிச ஜெயாவின் தனிப்பட்ட குணாதிசயங்கள் காரணமாக இந்த "வரலாற்றுப் புகழ்' வாய்ந்த கைது அன்று நிகழ்ந்தது.



எல்லா ஊடகங்களும் பெரியவாள், பால பெரியவாளின் லீலைகளை விலாவாரியாக எழுதியதும், சங்கரராமனைக் கொன்றதை ஜெயேந்திரன் பெருமையாக ஒத்துக்கொண் டதும் நக்கீரன் இதழில் வெளியான போது, சங்கர மடத்தின் அதிகாரம் சரிந்து விடும் போலத் தெரிந்தது. ஆனால் முதலாளிகள், அரசியல்வாதிகள், அதிகார வர்க்கங்கள், இந்து மதவெறி அமைப்புகள் ஆகியவற்றின் தரகு, கட்டைப் பஞ்சாயத்து மையமாகத் திகழும் சங்கரமடம் தனது அதிகாரத்தைச் சற்றே இழந்திருந்தாலும், அது தற்காலிகமானதே என்பதை இவ்வழக்கின் தற்போதைய நிலைமைகள் எடுத்துக் கூறுகின்றன.



சங்கரராமனைக் கொன்ற கூலிப்படையினரைக் கண்ணால் கண்ட சாட்சிகள் வரத ராஜப் பெருமாள் கோவில் ஊழியர்கள். சங்கரராமனது மனைவி, மகன் மற்றும் மகளும் வீடு தேடி விசாரிக்க வந்த கொலையாளிகளைப் பார்த்திருக்கின்றனர். இந்த அடிப்படையில் போலீசார் கூலிப்படையையும், மடாதிபதிகளையும் கைது செய்து வழக்கு போட்டனர். இந்த வழக்கு தமிழகத்தில் நடந்தால் தங்களுக்கு நீதி கிடைக்காது என்றும் வழக்கு விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டுமென்றும் கூறி உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தது ஜெயேந்திரன் தரப்பு. வழக்கை புதுச்சேரிக்கு மாற்றுமாறு உச்சநீதி மன்றமும் வழிமொழிந்தது. விசாரணையின் போக்கு எப்படி இருக்கும் என்பது அப்போதே ஏறத்தாழத் தெரியத் தொடங்கி விட்டது.



மாநிலத்தில் ஆட்சி மாற்றம் நடக்கும் வரையில் வழக்கு விசாரணையை நடத்த விடக் கூடாது என்பதற்காக எல்லா வகையான நீதித்துறை தகிடுதத்தங்களையும் செய்தது சங்கரமடம். திமுக ஆட்சி வந்தவுடன் சங்கரமடத்தினர் பெருமகிழ்ச்சி அடைந்ததாகவும், இனி வழக்கு தங்களுக்கு சாதகமாக அமையுமென்று உற்சாகம் கொண்டிருப்பதாகவும் பல பத்திரிகைகள் எழுதின. வழக்கைக் கொண்டு செல்வதில் அரசுதரப்பு காட்டிய மெத்தனம் இந்தக் கூற்றுகளை மெய்ப்பிப்பதாகவே அமைந்திருந்தது.



தற்போது, புதுச்சேரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்துவரும் விசாரணையில், கொலையை நேரில் பார்த்த சாட்சிகளான கோவில் ஊழியர்கள் தமது முந்தைய வாக்குமூலத்தை மறுத்து கொலையாளிகளைப் பார்க்கவில்லை என்று கூறி, "பிறழ் சாட்சி'களாக மாறி விட்டனர். இந்த நாடகத்தின் உச்சமாக சங்கரராமனது மனைவியும், மகனும், மகளும் கூட கொலையாளிகளை நேரில் பார்க்கவில்லை எனக் கூறி பிறழ் சாட்சியங்களாக மாறி விட்டனர்.



பெஸ்ட் பேக்கரி வழக்கில் ஜகீரா பானு பிறழ் சாட்சியமாக மாறியதற்காக தண்டிக்கப்பட்டார். வழக்கில் மறு விசாரணை நடத்தப்பட்டது. சங்க பரிவாரம் மற்றும் மோடியின் அதிகார பலத்தையும், ஆள் பலத்தையும் மீறி அப்படியொரு தீர்ப்பைப் பெறுவதற்கு அசாத்தியமானதொரு போராட்டத்தை தீஸ்தா சேதல்வாத் நடத்த வேண்டியிருந்தது. அப்படிப்பட்டதொரு போராட்டம் இல்லையேல் அது நிச்சயம் சாத்தியமாகி இருக்காது. தற்போதும் பிறழ் சாட்சிகளாக மாறி விட்ட இவர்களை அரசு தரப்பு தீவிரமாகக் குறுக்கு விசாரணை செய்ய இயலுமென்றாலும், அரசு தரப்பு அதைச் செய்யுமா என்பதுதான் கேள்வி.



பணபலமும் அரசியல் அதிகார பலமும் கொண்ட ஆளும் வர்க்கத்தினர் சட்ட வழிமுறைகள் மூலம் தண்டிக்கப்படுவது அரிதினும் அரிது. "பிரம்மம் தான் உண்மையானது; நாம் காணும் இந்த உலகம் மாயை'' என்றான் ஆதிசங்கரன். அந்த ஆதிசங்கரன் பெயரிலேயே போலி டாக்குமெண்டு தயார் செய்து, காஞ்சி மடத்தை உருவாக்கியவர்கள் அல்லவா கும்பகோணத்துப் பார்ப்பனர்கள்! இதோ கண்ணால் கண்டதெல்லாம் பொய் என்று நிரூபிக்கப்பட்டு விட்டது. இனி உண்மை எது, பிரம்மம் எது?


ஏ.டி.எம். மா, உருட்டுக் கட்டையா?

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP