செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

பாதுகாப்புக்கே பாதுகாப்பு....

அது என்ன ரவுடிக்கே ரவுடி, கில்லாடிக்கு கில்லாடி போல, பாதுகாப்புக்கே பாதுகாப்பு ? இருங்கள் விளக்கமாக சொல்லுகிறேன். ஒரு நபருக்கு சில நபர்கள் பாதுகாப்புத் தருகிறார்கள். அந்த சில நபருக்கு அந்த ஒரு நபர் பாதுகாப்புக் கொடுத்தால் ? குழப்பமாக இருக்கிறதா. விளக்கமாகச் சொல்லுகிறேன்.

ஒரு மன்னருக்கு மூன்று பேர் பாதுகாப்புத் தருகிறார்கள். அந்த மூன்று பேருக்கும், மூன்று பொற்கிழிகளைக் கொடுத்து, அந்த மன்னர் அவர்களின் வாழ்வுக்கு பாதுகாப்பு தந்தால் ? இது ஏதோ மன்னர் காலத்தில் நடந்த கதை அல்ல.

தற்காலத்தில், சுதந்திர இந்தியாவில், ஜனநாயகம் உள்ளது என்று கூறிக்கொள்ளும் தமிழகத்தில்தான் நடந்திருக்கிறது.

தமிழக முதலமைச்சராக உள்ள கருணாநிதி, தன்னுடைய பாதுகாவலர்களாக உள்ள, மூன்று காவல்துறை ஆய்வாளர்களுக்கு, 2 கோடி மதிப்புள்ள வீட்டு மனையை வெறும் எழுபத்தைந்து லட்ச ரூபாய்க்கு கொடுத்திருக்கிறார். எதற்காக கொடுத்திருக்கிறார். தன்னை பாதுகாப்பாக பார்த்துக் கொள்கிறார்கள் என்பதற்காக.



இவர்கள் மூன்று பேர் மட்டும்தான் பார்த்துக் கொள்கிறார்களா, இவரின் கான்வாயின் முன்னும் பின்னும் செல்லும் வண்டிகளில் உள்ள மற்றவர்கள் கருணாநிதியை பாதுகாப்பதில்லையா என்றால் அவர்களும் பாதுகாக்கிறார்கள்தான். ஆனால் அவர்களுக்கெல்லாம் இல்லாத இந்தப் பொற்கிழி இந்தப் பாண்டியனுக்கும், வினோதனுக்கும், கணேசனுக்கும் மட்டும் ஏன் என்பதை, கருணாநிதிதான் விளக்க வேண்டும்.

சரி, இவர்கள் நன்றாக வேலை செய்து, கருணாநிதியை நன்றாக பாதுகாக்கிறார்கள் என்றால், கோபாலபுரம் வீட்டையோ, சிஐடி காலனி வீட்டையோ அல்லவா எழுதிக் கொடுத்திருக்க வேண்டும் ? மக்களின் சொத்தை எதற்காக இந்த மூவருக்கும் கொடுக்க வேண்டும் ?

ஏனென்றால், மக்களின் சொத்துக்கள் அனைத்தையும், கருணாநிதி தன்னுடைய சொத்தாகவே நினைக்கிறார். இன்னும் 2016 வரை ஆட்சிப் பொறுப்பை கொடுத்துப் பாருங்கள். தமிழகத்தில் யாருக்குமே எந்தச் சொத்தும் இல்லாமல், இருக்கும் சொத்துக்கள் அனைத்தையும் குடும்பத்துக்குள் பகிர்ந்து கொள்ளப் போகிறார்.

மூன்று பாதுகாவல் அதிகாரிகளில், கணேசனுக்கும், வினோதனுக்கும் மட்டும் “அப்பழுக்கற்ற அரசு ஊழியர்கள்“ என்ற பிரிவின் கீழ் இரண்டு க்ரவுண்டு நிலம். பாண்டியனுக்கும் மட்டும் மனைவி மீனா பெயரில் வீட்டு மனை (பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா).

சரி, இந்த இரண்டு பேர் மட்டும் தான் அப்பழுக்கற்ற அரசு ஊழியர்கள் என்றால், தமிழக அரசில் பணியாற்றும், மற்ற ஊழியர்கள் எல்லாம் அப்பழுக்குள்ள ஊழியர்களா ?

அவர்களும் அப்பழுக்கற்ற அரசு ஊழியர்கள் என்றால் அவர்களுக்கு இரண்டு கோடி ரூபாய் நிலம் ஏன் வழங்கப் படவில்லை என்ற அதிகப்பிரசங்கி கேள்விகளையெல்லாம் சவுக்கு மாதிரி கேட்டுக் கொண்டு இருக்கக் கூடாது.




கருணாநிதியின் இந்த வள்ளல்தன்மை, இப்போது வந்ததல்ல. 1989-90ல் தமிழக முதலமைச்சராக கருணாநிதி இருந்த போது, அவருக்கு அப்போது பாதுகாப்பு அதிகாரிகளாக இருந்த, உபேந்திரன் மற்றும் பிஎஸ்.சேதுராமன் ஆகிய இரண்டு ஆய்வாளர்களுக்கும், அண்ணா நகரில் தலா ஒரு க்ரவுண்டு நிலம் வழங்கியவர்தான் இந்தக் கருணாநிதி. அவர்கள் இருவரும் தற்போது பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்கள்.

கருணாநிதி எப்படிப் பட்ட நபர் என்பதற்கு ஒரு உதாரணம். 1989ல் திமுக ஆட்சி நடக்கிறது. அப்போது பி.எஸ்.சேதுராமன் பாதுகாவல் அதிகாரி இருக்கிறார். அவரிடம் இன்னொரு போலீஸ் அதிகாரி போனில் உரையாடுகிறார்.

“என்ன சேதுராமன் எப்படி இருக்கீங்க ? “

“நல்லா இருக்கேன் சார். “

“என்னங்க ஜெயலலிதா வீட்ல இருந்து ராஜினாமா கடிதம் எடுத்தாங்களாமே…. உண்மையா ? “

“ஆமா சார். தலைவர் கரெக்டாதான் சார் பண்ணார். இந்த தொரை டிஜிபி இருக்கான்ல.. அவன்தான் உள்ள பூந்து கெடுத்து உட்டுட்டான் சார். இல்லன்னா எப்பபோ அந்த அம்மா போயிருக்கும் சார்“

ஜெயலலிதா, 6 மாதத்துக்கு ஒரு முறை, பால்கனியில் மட்டும் காட்சி தரும் காலம் அது.

ஒரிரு நாள் கழித்து சேதுராமனை அழைத்த கருணாநிதி, மேற்கூறிய உரையாடலை சேதுராமனிடம் ஒரு டேப்பில் போட்டுக் காட்டுகிறார். அதிர்ந்த சேதுராமன் திருதிருவென விழிக்கிறார்.

“என்னப் பத்தில்லாம் நல்லாதான் பேசிருக்க. துரை உனக்கு உயர் அதிகாரியில்ல ? இப்படியா மரியாதை இல்லாம பேசுறது ? “


“இனிமே இப்படிப் பேசாத. போ. “ என்றார். இதுதான் கருணாநிதி. கூடுதல் தகவல், அந்த சேதுராமன், கருணாநிதியின் தூரத்து உறவினர்.

பாண்டியன், வினோதன், கணேசன் ஆகிய மூன்று பேரும், “ட்ராலி பாய்ஸ்“ என்று பிரபலமாக அழைக்கப் படுகிறார்கள். இவர்கள் மூவருக்கும் ஏன் இந்தப் பெயர் வந்தது என்று வரலாற்று ஏடுகளை ஆராய்ந்ததில் சான்றுகள் ஏதும் கிடைக்கவில்லை. சவுக்கு வாசகர்களுக்கு தெரிந்தால் கூறவும்.





இந்த மூவருக்கும், தலா 4780 சதுர அடிக்கு, முகப்பேர் ஏரித் திட்டம், உயர் வருவாய்ப் பிரிவில் வீட்டு மனை ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார் கருணாநிதி. இந்த வீட்டு மனை ஒதுக்கீட்டிற்கு, அரசு நிர்ணயித்த விலை 75 லட்ச ரூபாய். இந்த 75 லட்ச ரூபாயை இவர்கள் மூவரும் ஒரே நாளில் செலுத்துகிறார்கள்.

மாதம் 10 ஆயிரம் ரூபாய் ஊதியம் பெரும் ஒருவர் எப்படி 75 லட்ச ரூபாய் செலுத்த முடியும் என்ற சந்தேகம் எழுந்து, FACT இந்தியா என்ற ஊழல் ஒழிப்பு அமைப்பு ஒன்று லஞ்ச ஒழிப்புத் துறைக்கு செப்டம்பர் 2009ல் புகார் ஒன்றை அனுப்புகிறது. நேர்மையான அதிகாரி என்று பரவலாக அறியப்படும் ராமானுஜத்திடம் அந்தப் புகார் நேரில் கொடுக்கப் படுகிறது. அந்த நேர்மையான (?????) ராமானுஜம்,(சார் உங்களைப் பற்றி சவுக்கு தனியே எழுதும்) அந்தப் புகாரின் மேல் மூன்று மாதங்கள் படுத்து உறங்குகிறார். துயில் கலைந்தவுடன், டிசம்பர் 2009ல், அந்தப் புகார் நம்மிடம் இருந்தால் ஆபத்து, என்று கருதி, இதை டிஜிபி அலுவலகத்துக்கு அனுப்புகிறார். (ஊழல் புகாரையெல்லாம் டிஜிபி அலுவலகத்துக்கு அனுப்புரீங்களே நீங்க என்ன போஸ்ட்மேனா ராமானுஜம் சார் ? இந்த சவுக்கோட பதிவையும் ஒரு ப்ரின்ட் எடுத்து லத்திக்கா சரணுக்கு அனுப்புங்க சார்.)

இத்தோடு இந்தக் கதையில் இடைவேளை. இப்போ ஃப்ளாஷ் பேக். 2008ம் ஆண்டு மார்ச் மாதம்தான் இந்த மூவருக்கும் இடம் ஒதுக்கீடு செய்யப் பட்டது. அப்போது ஜாபர் சேட்டிடம், இந்த மூவரும் இந்தத் தகவலைத் தெரிவிக்க, அவர்களிடம் சிரித்துப் பேசி விட்டு சாதாரண இன்ஸ்பெக்டர் பயலுங்களுக்கு ரெண்டு கோடி மதிப்புள்ள வீட்டு மனையை கொடுத்தால், ஐஜிக்கும் இன்ஸ்பெக்டருக்கும் என்ன வித்தியாசம் என்று பொருமுகிறார்.

அவரிடம் நெருக்கமான அந்த ஆன்டெணா அதிகாரியிடம் ஜாபர் சேட், “Has the CM gone insane ? Why is he allotting such prime property to these bloody fellows ? They are not worth it. If these fellows are rewarded like this, what respect will they have for IPS officers ? “ என்று கூறுகிறார்.




ஜுன் 2008 வாக்கில், மருத்துவர் ராமதாஸ் அவருடைய தொலைபேசியை ஒட்டுக் கேட்டு விட்டார் என்று, ஜாபர்சேட் மேல் கடும் கோபத்தில் இருக்கிறார். இதை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்று எம்எல்ஏ வேல்முருகன் மூலமாக முயற்சி செய்கிறார் ஜாபர் சேட்.



பாண்டியன் சார். 2008 ஜுன் மாதத்தில், மக்கள் டிவியில, உங்க மூணு பேருக்கும் வீட்டு மனை ஒதுக்கப் பட்டிருக்குன்னு செய்தி வந்தது தெரியுமா ? அது மக்கள் டிவிக்கு எப்படி தெரியும்னு நெனைக்கிறீங்க ?

சவுக்கு, மருத்துவர் ராமதாசை சந்தித்த போது, ராமதாஸ் மூன்று அரசாணைகளை காண்பித்து, இது உண்மையான ஆவணமா எனக் கேட்டார். அந்த அரசாணைகள் உங்கள் மூவருக்கும் வீட்டு மனை ஒதுக்கீடு செய்த ஆவணங்கள். சவுக்கு உண்மையான ஆவணங்கள்தான் என உறுதி செய்ததும் “அந்தப் பய, இதெல்லாம் கொடுத்தா நான் அவன மன்னிச்சுடுவேன்னு நெனைக்கிறான். ஆனா, நான் அவன உட மாட்டேன்“ என்று கூறினார்.

பாண்டியன் சார். மக்கள் டிவியில் இந்தத் தகவல் ஜுன் 2008ல் எப்படி வந்தது என்று இப்போது தெரிகிறதா ? என்னாதான் நெருங்கிப் பழகினாலும், அவங்க ஐபிஎஸ்தான், நீங்க சாதாரண காண்ஸ்டபிள் தான் சார். அதை மறந்துடாதீங்க. உங்கள என்னைக்குமே ஜாபர் சேட் மதிக்க மாட்டார் சார்.

ஃப்ளாஷ் பேக் முடிந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று விசாரணைக்கு வருகிறது.

FACT இந்தியா அமைப்பைச் சேர்ந்த ஒருவர் ட்ராலி பாய்ஸ் பற்றிய புகாரை லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் விசாரணை நடத்த உத்தரவிடும் படி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்.

வழக்கு விசாரணை தொடங்குகிறது. நீதிமன்றம் முழுவதும் வழக்கறிஞர்களை விட உளவுத்துறையினர் அதிகமாக இருக்கின்றனர். லஞ்ச ஒழிப்புத் துறையிலிருந்து சுதாகர் என்ற ஆய்வாளர் அரசு வழக்கறிஞருக்கு உதவுவதற்காக வந்திருக்கிறார்.

மனுதாரர் சார்பில் ராதாகிருஷ்ணன் என்ற சிங்கம் தன் கர்ஜனையை தொடங்குகிறது. ஒரு புகாரை பதிவு செய்து விசாரணை நடத்த மறுத்ததற்காக நீதிமன்றத்தை அணுக வேண்டிய ஒரு அவலச் சூழல் உள்ளது என்று தன் வாதத்தை தொடங்கினார்.



உடனே அரசு வழக்கறிஞர் சரவணன், இது விளம்பரத்திற்காக போடப்பட்ட வழக்கு. வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறினார். சரவணன் சார், மனுதாரர் செல்வராஜை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா ? அவர் எப்படி இருப்பார் என்று தெரியுமா ? அப்புறம் எதற்கு சார் இப்படி குதிக்கிறீர்கள். எவ்வளவு குதித்தாலும், நீங்கள் எந்தக் காலத்திலும் உயர்நீதிமன்ற நீதிபதி ஆகவே முடியாது.

சவுக்கு அது போன்ற ஒரு துன்பியல் சம்பவம் நடப்பதை அனுமதிக்காது. அரசு வழக்கறிஞராக நீங்கள் அந்த நீதிமன்றத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்ற விபரங்கள் எல்லாம் சவுக்குக்கு தெரியும்.

விளம்பரத்திற்காக என்று சரவணன் கூறியதும், சிங்கம் சீறியது. அரசு வழக்கறிஞருக்கு, இது போலக் கூறுவதற்கு உரிமையில்லை. அவர் தனது வார்த்தைகளை திரும்பப் பெற வேண்டும் என்று உரத்த குரலில் கூறினார்.

நீதியரசர் சி.டி.செல்வம் ராதாகிருஷ்ணன் அமைதியாக இருங்கள் நீங்கள் ஏன் கோபப் படுகிறீர்கள், என்ற கூறி விட்டு, ராதாகிருஷ்ணன் தனது வாதத்தை தொடங்குவதற்கு முன்பே, உங்களிடம் அவர்கள் 75 லட்ச ரூபாயை கட்டியிருக்கிறார்கள் என்பதைத் தவிர உங்களிடம் வேறு ஆதாரங்கள் இல்லை. You cannot go on a fishing expedition I am going to dismiss the petition என்று கூறினார்.

75 லட்ச ரூபாயை கட்டியதற்கான ஆதாரமும், அதைக் கட்டிய அரசு ஊழியரின் மாத ஊதியம் 10,000 என்பதையும் மீறி என்ன எதிர்ப்பார்க்கிறார் நீதியரசர் என்பது வாதாடிய ராதாகிருஷ்ணனுக்கு புரியவில்லை.

அவர், நீங்கள் மனுவை தள்ளுபடி செய்யுங்கள், ஆனால் எனது வாதத்தை பதிவு செய்தவுடன் தள்ளுபடி செய்யுங்கள் என்று கூறினார்.

வேறு வழியின்றி, சரி வாதிடுங்கள் என்று கூறினார் நீதியரசர். சிங்கம் தனது கர்ஜனையை தொடங்கியது. லஞ்ச ஒழிப்புத் துறையின் பணி என்ன, ஒரு புகார் வந்தால் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று வாதிட்டுக் கொண்டிருக்கையில் உணவு இடைவேளை வந்தது.

மதியம் வழக்கு தொடங்கியதும் வழக்கமாக அவசர வழக்க குறித்த நீதிபதியிடம் முறையிடும் நடைமுறையின் படி, வழக்கறிஞர்கள், நீதியரசரிடம் தங்களது வழக்கு குறித்து முறையிட தொடங்கினார்கள். ஒரிருவரை கேட்ட நீதியரசர், நான்காவது நபர் தொடங்கியதும், சமீப காலங்களாக, நீதிமன்றத்தின் நேரத்தை மூன்றாவது நபர்கள் தேவையின்றி வீணடிப்பது நடந்து வருகிறது, இது தவிர்க்கப் பட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

அடுத்து ஒரு வழக்கறிஞர் பேச தொடங்கியதும், நீங்கள் இப்படியே தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தால், நான் வழக்கு விசாரணையை எப்படிப் பார்ப்பது என்று கோபப் பட்டார். அனைவரும் அமைதியானார்கள்.

சிங்கம் தனது கர்ஜனையை மீண்டும் தொடங்கியது. ஒரு குடிமகன், ஒரு புகாரை பதிவு செய்யக் கூட நீதிமன்றத்தின் கதவுகளை தட்ட நேரிடும் ஒரு அவலம் இந்த நாட்டில்தான் உண்டு. பத்தாயிரம் ரூபாய் ஊதியம் பெரும் மூன்று அரசு ஊழியர்கள் ஒரே நாளில் எப்படி 75 லட்சம் கட்டினார்கள். அவர்கள் கடன் வாங்கிக் கட்டியிருக்கலாம், தங்களின் பூர்வீகச் சொத்தை விற்றுக் கட்டியிருக்கலாம், நான் மறுக்கவில்லை. ஆனால் இந்த விபரம் விசாரணை செய்தல்லவா கண்டிறியப் பட வேண்டும் ? விசாரணையே நடக்காமல் ஒரு வருடமாக அமைதியாக இருந்தால் எதையோ மறைக்கிறார்கள் என்று தானே பொருள் ? லஞ்ச ஒழிப்புத் துறையில் விசாரணை எப்படி நடத்த வேண்டும் என்று கூறும் Vigilance Manual புத்தகத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறதே அதை ஏன் லஞ்ச ஒழிப்புத் துறை பின்பற்றவில்லை என்று கூறி விட்டு, உச்சநீதிமன்றம் ஊழல் புகாருக்கு ஆளானவர்களில் பாரபட்சம் காட்டாமல் அனைவர் மீதும் விசாரணை நடத்த வேண்டும் என்று தீர்ப்பளித்திருப்பதை சுட்டிக் காட்டினார்.



ஒன்றரை மணி நேரம் வாதிட்டு முடித்தபின், அரசு வழக்கறிஞர் ஒரு இரண்டு பக்க அறிக்கையை நீதியரசரிடம் கொடுத்தார். அந்த அறிக்கையில், மனுதாரரின் புகார் டிஜிபியிடம் அனுப்பப் பட்டதாகவும், அதன் மீது விசாரணை நடத்திய டிஜிபி இவர்கள் இன்னொருவரோடு கூட்டு ஒப்பந்தம் போட்டு அதேன் மூலம் பணம் செலுத்தியிருப்பதால், இவர்கள் மீது எவ்வித விசாரணையும் நடத்த முகாந்திரம் இல்லை என்று கூறியிருப்பதாக தெரிகிறது.

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு தானே அறிக்கை நீதியரசரிடம் கொடுக்கப் பட்டது. அதற்கு முன்பே இதை தள்ளுபடி செய்கிறேன் என்று ஏன் நீதிபதி சொன்னார் ? என்று கேள்வி கேட்டு நீதிமன்றத்தின் உள்விவாகரங்களுக்குள் தலையிட்டீர்கள் என்றால், நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாகி விடுவீர்கள் சொல்லி விட்டேன். சவுக்கு வாசகர்களை பாதுகாக்கும் பொறுப்பும், சவுக்குக்கு உண்டு.

இருவரும் வாதங்களை முடித்த பின் நீதியரசர், தனது இரண்டு கைகளையும் தலையில் வைத்த படி குனிந்து இரண்டு நிமிடங்கள் இருந்தார். பிறகு தலையை கோதினார். (நீதிக்கு தலைவணங்கு என்பதை சிம்பாலிக்கா சொல்றாரோ ?) பிறகு, டிஜிபி விசாரணை நடத்தி முடித்து விட்டதால், அதன் அடிப்படையில், இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்று உத்தரவிட்டார்.

இந்த சிறப்பான தீர்ப்பு அளித்த நீதியரசரை யார் என்று தெரிந்து கொள்ள சவுக்கு வாசகர்கள் ஆவலாக இருப்பீர்கள் தானே ? இதோ அந்த நீதியரசர்.



லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் கொடுத்தால், அதை டிஜிபிக்கு அனுப்பும் ஒரு அற்புதமான நடைமுறையை நீதிமன்றமே ஏற்றுக் கொண்ட நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறை எதற்கு ? இழுத்து மூடி விடலாமே ? இந்த லட்சணத்தில், அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு, அடிப்படை ஊதியத்தில் 15 சதவிகிதம் சிறப்பு ஊதியமாம்.

வழக்கு முடிந்து விட்டது. இனி சவுக்கின் புலன் விசாரணை. இந்த மூன்று பேருக்கும் வீட்டு மனை ஒதுக்கீடு செய்யப் பட்டதா …. பாண்டியன் என்ன செய்கிறார்… அவருக்கு 75 லட்ச ரூபாய்க்கு ஒதுக்கீடு செய்த இடத்தை கல்யாண்குமார் என்பவரின் மனைவி பத்மா என்பவருக்கு ஒரு கோடியே எழுபத்தைந்து லட்சத்திற்கு விற்கிறார்.




வினோதன் என்ன செய்கிறார். தனக்கு ஒதுக்கப் பட்ட மனையை சண்முகம் என்பவரின் மனைவி கவுரி என்பவருக்கு, ஒரு கோடியே எழுபத்தைந்து லட்சத்துக்கு விற்கிறார். கணேசன் என்ன செய்கிறார்…. அவரும் கல்யாண்குமார் என்பவரின் மனைவி பத்மா என்பவருக்கு ஒரு கோடியே எழுபத்தைந்து லட்சத்திற்கு விற்கிறார்.

புரியிற மாதிரி சொன்னா. ஒரே நாளில் “கை மாத்தி விட்டதுக்கு, இவங்க மூனு பேருக்கும் லாபம் தலா ஒரு கோடி. “ ஜாபர் சேட்டுக்கு கோபம் வர்றது நியாயம் தானே ?

இப்போ பாண்டியனோட வீட்டு மனையில, பெரிய பங்களா கட்டிகிட்டு இருக்காங்க சார். சும்மா சூப்பரா இருக்கு.








இப்போ சொல்லுங்க சார். பாதுகாப்புக்கே பாதுகாப்பு தலைப்பு பொருத்தம் தானே ?
சவுக்கு

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP