புதன், 10 பிப்ரவரி, 2010

ஜெயராம் மட்டும்தான் பெண்களை அவமானப்படுத்தினாரா?

பிரபல நடிகர் ஜெயராம் நடித்த 'ஹேப்பி ஹஸ்பெண்ட்ஸ்' என்ற மலையாள படம் தற்போது ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இ‌ந்த பட‌‌த்‌தி‌ல் வீட்டு வேலைக்காரப் பெண்ணை ''சை‌ட்'' அடிப்பது போல் காட்சிகள் உள்ளன.

இந்நிலையில் ஏசியா நெட் தொலைக்காட்சியின் 'டாக் ஷோ'வில் பங்கேற்ற ஜெயராமிடம், இது பற்றி குறிப்பிட்டு நிஜ வாழ்க்கையில் நீங்கள் வேலைக்காரியை சைட் அடித்து இருக்கிறீர்களா? என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்டார்.

அதற்கு பதில் அளித்து ஜெயராம் கூறும்போது, என் வீட்டு வேலைக்காரி கறுத்து தடித்த தமிழச்சி, போத்து (எருமை) மாதிரி இருப்பாள்; அதைப்போய் எப்படி சைட் அடிக்க முடியும் ? " என்றார்.இது அந்த தொலை‌க்கா‌ட்‌சி‌யி‌ல் ஒளிபரப்பானது.”(வெப்துனியா)

மேற்கண்ட செய்தி பரவியதும் தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியது. அவருடைய வீடும் தாக்கப்பட்டது. அதை தொடர்ந்து “நாம் தமிழர்” இயக்கத்தை சார்ந்த தோழர்கள் 16 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக செய்திகளும் வெளியாகியிருக்கிறது. அதோடு நிற்காமல் நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் மீது கைது நடவடிக்கை ஏவப்பட உள்ளதாகவு மேற்கொண்டு செய்திகள் தெரிவிக்கின்றன(நாம் தமிழர் இணையம்)

பின்னர் சூழலின் தீவிரத்தை உணர்ந்து நடிகர் ஜெயராம் மன்னிப்பு கேட்டார்.............
ஜெயராம் மீதும் வழக்குப்போடப்பட்டிருப்பதாக செய்திகளை இணையங்களில் கண்டோம்....

நடிகர் ஜெயராமின் அந்த கேவலமான சொற்கள் கண்டிக்கத்தக்கவைதான்.......ஆனால் , ஜெயராம் மட்டுமா கண்டிக்கத்தக்கவர்.......

மேற்கண்ட நிகழ்வுகள் குறித்து நண்பர்களோடு உரையாடிக் கொண்டிருந்த விடயங்களை என் புரிதலுக்குட்பட்டு சில கருத்துக்களை இங்கே பதிவு செய்கிறேன்..... -- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
நம் தமிழ் இளைஞர்கள், தமிழ்தாய்மார்கள் மீது அளவில்லா மதிப்பு வைத்திருக்கிற இனவுணர்வுள்ள இளைஞர்கள் வரவேற்கும் அதே வேளையில், மேற்கொண்டும் பெண்களை இழிவுப்படுத்தும் போக்கை கடைபிடிக்கு மற்ற துறைகளையும் கண்டித்து, எதிராக களம் காண வேண்டிய தேவையிருக்கிறது............

பெண்களை இழிவுப்படுத்தும் சமூகத்தில் வாழ்ந்து கொண்டு பெண்களை இழிவுப்படுத்தும் முன் சிந்தித்து சொற்களை உதிர்ப்பார்கள் என்று அந்த நடிகரிடம் மட்டுமல்ல சமூகத்தில் வாழும் சாமானிய மனிதன்வரை எவனிடமும் நாம் எதிர்ப்பார்க்கவில்லை...ஏனென்றால் அவர் சார்ந்திருக்கும் துறை அத்தகையது. ஆணாதிக்க துறை(சமூகம்).

திரை ஊடகம்

பெண்களை இழிவுப்படுத்துவதில் இன்று வலுவான முதல் ஊடகம் இதுதான். பெண்ணின் அங்கங்களை சமூகத்தில் காட்சி பொருளாக்கி விற்பதில் முதலிடத்தில் இருப்பது இதே ஊடகம்தான்.....

பெண்களின் உடலில் ஏற்படும் இயற்கையான மாற்றத்தை

“சக்கரவள்ளி கிழங்கு நீதான் சமஞ்சது எப்படி” “மாசி மாசம் ஆளான பொண்ணு” என்று பெண்ணின் உடலை கூவி விற்கும் பாங்கு........

“சின்னவீடா வரட்டுமா? பெரிய வீடா வரட்டுமா?”என்று வீடு கட்டி ரியல் எஸ்டேட் பாணியில் விற்றது............

“டேடி மம்மி வீட்டில் இல்லை, தடை போட யாருமில்லை............(வில்லு)”என்று வரம்புமீற அழைப்பது............(இதில் கொடுமை என்னவென்றால் 5 வயது குழந்தைகள் பள்ளிக்கூட விழாக்களில் இதே பாடல்களுக்கு ஆடுகின்றனர்)

“பள்ளிக்கூட ஸ்நேகம், பள்ளியறை பாய் வரை போகும் யோகம்” (குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்)

செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேலை உடுத்த தயங்குறியே என்று பெண்ணுக்கு உடை உடுத்த பாடம் எடுத்ததுவரைக்கும்.........

கருத்துள்ள(?) பாடல்களை தந்து பெண்களை இழிவுப்படுத்துவதில் ஜெயராமுக்கு முன்னோடிகள், நம் திரை கண்ணாடிகள்...........

பாடல்களில் மட்டும்தானா என்றால் வசனங்களில் இவர்களின் ஆபாசத்துக்கு, ஆணாதிக்க வக்கிர புத்திக்கு அளவில்லை...

பொம்பளை சிரிச்சா போச்சு...........

நான் நினைச்சா ஒரு மணி நேரத்துக்கு ஒரு பெண்ணோட வாழ்வேன்( பிரியமானவளே)

அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும், அதிகமா கோபப்படுற பொம்பளையும் வாழ்ந்ததா சரித்திரமில்லை..........

என்று கோபப்படுவதற்கு கூட ஆண் என்ற அடையாளத்துக்கு பட்டாஎழுதும் திரைத்துறையை கண்டித்தும்...........

சின்னத்திரை ஊடகங்கள்
பெண்ணை வக்கிர புத்திக் கொண்டவளாக, கண்களின் க்லிசரின் சுரப்பிகள் தொடர்ந்து சுரந்து கொண்டிருக்கும் பிறவிகளாக, சித்தரித்து உருவாக்கப்படும் குறும்(?), நெடுந்தொடர்கள் ஆகியவற்றிற்கு எதிராக..............

விளம்பர படங்கள்

விளம்பர படங்கள் என்ற போர்வையில்

தமிழ்நாட்டு பெண்களின் உள்ளத்தில் கருப்பு கீழானது என்று உளவியல்ரீயாக தாழ்வு மனப்பான்மையை விதைக்கும் முகப்பூச்சு விளம்பரங்கள் தொடங்கி..........ஆணின் உள்ளாடை விளம்பரத்துக்கு கூட பெண்ணை உள்ளாடையோடு நடமாடவிட்டு இளைஞர்களின் உள்ளத்தின் பெண்ணின் மீதான வக்கிர சிந்தனையை தூண்டிவிடும் விளம்பர நிறுவனங்களை கண்டித்தும்.............

களமிறங்க வேண்டிய கொள்கை தெளிவு நம் இளைஞர்களுக்கு வர வேண்டும்......

ஆனால், ஆணாதிக்க பிற்போக்கு தனத்திற்கு இந்த ஊடகங்கள் மட்டும்தான் காரணமா? மக்களுக்கேற்ற மகேசன் போல, ஆணாதிக்க சமூகத்தின் பிம்பமாகவே நிலவும் இந்த ஊடகங்களை கண்டித்து களமிறங்கும் நாமும் நம்மை கொஞ்சம் ஆய்வு செய்து கொள்ள வேண்டாமா?

ஒரு ஆணும், ஆணும் சண்டையிட்டு கொள்ளும் பொழுது வசைப்பாட பயன்படுத்தப்படும் கொச்சையான சொற்கள் ஏதாவது ஆணை திட்டுவதாக வருகிறதா? வசைப்பாடும் ஆண் எதிரிலிருக்கும் ஆணின் சகோதரி, தாய், மனைவி என அவர்களைத்தான் திட்டி தன் ஆண்மையை(?) நிருபிக்கிறான். இதுதானே நம் வழக்காக இருக்கிறது...

எ.கா:ஆணின் துணிவை உரசிப்பார்க்க..........ஆணை போடா பொட்டை என்று திட்டினால் போதும்...உடனே இவருக்கு துணிவு பொத்துக் கொண்டு வந்துவிடும்....(சமூகத்தில் தாழ்ந்த சாதியாக கருதப்படுகிற சாதியின் பெயரை கொண்டு திட்டினால் எப்படி சாதிய திமிரோடு ஆதிக்கசாதியாக கருதிக் கொள்ளும் அன்பர்களுக்கு கோபம் வருகிறதோ, அதே சூழலை இங்கே பொறுத்தி பார்த்தால் தவறில்லை என்று நினைக்கிறேன்)

ஆக, நாம் எதிர்த்து களமாட வேண்டியது விரிவான பார்வையில்.................பெண்களின் கருத்துக்களுக்கும் கொஞ்சம் செவிப்படுத்து,

நம் இளைஞர்கள் நடுவில் நிலவும் ஆணாதிக்க பிற்போக்குத்தனத்தை



மாற்றிக் கொள்ளாமல்............ஜெயராம் போன்ற பிரபல ஆணாதிக்க பிற்போக்குவாதிகளை கண்டிக்கும் தகுதி நமக்கு உண்டா?

ஊரை திருத்துவதற்கு முன் நாம் கொஞ்சம் நம்மை திருத்துவோம்.........

பெண்களை நுகர்வு பாண்டமாக கருதுவதை ஒழித்து சக மனுசியாக பார்க்க பழகுவோம்...

தமிழின ஜெயராம்களையும் கொஞ்சம் கவனித்தில் கொண்டு திருத்த முயல்வோம்

---------------------------------------------------------------------------------------------------
அதோடு நாம் இங்கே நம் தமிழ் உணர்வாளர்கள், தமிழச்சிகளுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அவமானத்தையும் கொஞ்சம் கவனத்தில் கொள்ள வேண்டும்......

இந்த இணைப்பை அழுத்திப்பாருங்கள்
http://thatstamil.oneindia.in/news/2010/02/07/lack-communication-skill-grounds-sc.html
பெண்கள் கருப்பானவர்கள், குட்டையானவர்கள் என்று சொல்லி விமானப்பணிப்பெண் நேர்காணலின்பொழுது நிராகரிக்கப்பட்டிருக்கிறார்கள்...........இது தமிழச்சிகளுக்கு நேர்ந்த அவமானமில்லையா?
வெள்ளைத்தோல்தான் அழகு என்று கருதிக் கொண்டு எம் இன பெண்களை இழிவுப்படுத்த இந்த பண்டார கூட்டத்திற்கு எவன் கொடுத்தது அதிகாரம்....

ஆப்ரிக்க நாட்டில் நிறத்தை அடிப்படையாக கொண்டு அவர்கள் யாரையும் விமான பணிப்பெண் வேலைக்கு நிராகரிக்கிறார்களா, என்ன?

Read more...

செஞ்சியில் கத்தி தீட்டும் இந்து முன்னணி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள கோதண்டராமர் கோயில் இப்பொழுது
பிரச்சினைக்குள்ளாக்கப்பட்டுள்
ளது. கோயில் உள்ள இடம்
கிறித்துவர்களுக்குச் சொந்தமானது என்ற நிலையில், பிரச்சினை
கிளம்பியுள்ளது. கோட்டாட்சியர் மற்றும் காவல் துறையினர் இருதரப்பினரையும்
அழைத்துப் பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருக்கும்போது கூட்டத்தின்
முடிவுக்கு ஒத்துழைக்காமல் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் அத்துமீறும்
நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.

கோயிலுக்கு இடம் ஒதுக்குவது குறித்து பேராயரிடம் கேட்டு முடிவு சொல்ல 10
நாள்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்த கூட்டம் வரும் 15 ஆம் தேதி
மாலை நடைபெறும்; அதுவரை இப்பொழுதுள்ள நிலையே தொடரும் என்று
அறிவிக்கப்பட்டது. இந்துக்கள் சார்பில் கலந்துகொண்ட இந்து முன்னணியைச்
சாராதவர்கள் அந்த முடிவுக்குக் கட்டுப்பட்டனர். எதையும் பிரச்சினையாக்கி,
சூடாக்கி அதன்மூலம் குளிர்காய வேண்டும் என்பதுதானே இந்து முன்னணி
வகையறாக்களின் அணுகுமுறை? அதன்படி 25 பேர்களைத் திரட்டிக் கொண்டு
கோயிலுக்குள் நுழைந்து வழிபட முனைந்துள்ளனர். காவல்துறை தடுத்துள்ளது.
வாக்குவாதம் சூடாகியிருக்கிறது.

இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்; இராமகோபாலனை அழைத்து
வருவோம் என்று மிரட்டலில் இறங்கியுள்ளனர்.

எந்தவித சட்டம் ஒழுங்குக்கும் கட்டுப்படாதவர்கள் இவர்கள். விநாயகர்
ஊர்வலம் என்று காவல்துறையிடம் அனுமதி பெறுவார்கள். அனுமதி பெறும்வரை
நயந்து, பெற்றபின் அனுமதி வழங்கப்பட்ட பாதைகள் வழியாக செல்லாமல், அனுமதி
மறுக்கப்பட்ட இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளில் திடீரென்று நுழைய
முற்படுவார்கள். காவல்துறை தடியடி நடத்தவேண்டிய கட்டாயம் ஏற்படும். உடனே
இந்த அரசு இந்துக்களுக்கு எதிரான அரசு என்று கூச்சல் போடுவார்கள்.

இந்துக் கோயில் இருக்கிறது. எனவே வழிபட எங்களுக்கு உரிமை உண்டு என்று
இந்து முன்னணியினர் சொல்வார்களேயானால், அதே காரணம் வேலூர்
கோட்டைக்குள்ளிருக்கும் முஸ்லிம்களின் தர்காவுக்குப் பொருந்தாதா? அங்கு
மட்டும் வேறு நியாயம் பேசுவது ஏன்? எதிலும் இரட்டை அளவுகோல்தானா?

பாபர் மசூதி பிரச்சினையை சங் பரிவார்க் கும்பல் கையில் எடுத்துக்கொண்ட
காலந்தொட்டு, இதுபோன்ற பிரச்சினைகள் நாட்டின் பல பகுதிகளிலும் ஆங்காங்கே
வெடித்துச் சிதற ஆரம்பித்துவிட்டன.

பாபர் மசூதிக்குமுன் அங்கு ராமன் கோயில் இருந்தது; பாபர், ராமன் கோயிலை
இடித்துவிட்டுத்தான் மசூதியைக் கட்டினார் என்று தம் போக்கில்
பேசினார்கள்; பிரச்சாரம் செய்தார்கள். ஒரு காலகட்டத்தில்
பல்லாயிரக்கணக்கான மக்களை வெறியூட்டி கூட்டிச் சென்று, கரசேவை என்ற
பொய்யான தகவலை நீதிமன்றத்திற்குச் சொல்லி உள்ளே சென்று, 450 ஆண்டுகாலம்
வரலாறு படைத்திட்ட பாபர் மசூதியைத் தரைமட்டமாக இடித்துத் தள்ளியது எந்த
வகையில் நியாயமானதாக இருக்க முடியும்?

இப்படி வரலாற்றைப் பின்னோக்கி நகர்த்தினால் பல அதிர்ச்சியூட்டும்
தகவல்களை இந்துத்துவாவாதிகள் சந்திக்க வேண்டியிருக்கும்.

திருப்பதி வெங்கடாசலபதி கோயில், சபரிமலை அய்யப்பன் கோயில், காஞ்சிபுரம்
ஏகாம்பரேசுவரர் கோயில் என்று ஒரு நீண்ட பட்டியல் உண்டு; இவை எல்லாமே
புத்த விகாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு அவ்விடங்களில் கட்டப்பட்ட
கோயில்கள் என்பதற்கு அழுத்தமான, ஆணித்தரமான ஆதாரங்கள் உண்டே! அதன்
அடிப்படையில் நடந்துகொள்ளத் தயார்தானா?

வாய் கொடுத்து வாங்கிக் கட்டிக்கொள்ள ஆசைப்படுகிறதா ஆர்.எஸ்.எஸ். வகையறா?

செஞ்சியில் கலரவத்துக்குக் கத்தியைத் தீட்டப் பார்க்கிறார்கள்; கடுமையான
நடவடிக்கைகள்மூலம் தொடக்கத்திலேயே கிள்ளி எறிய வேண்டும் என்பதுதான் நமது
கனிவான வேண்டுகோளாகும்.

Read more...

திங்கள், 8 பிப்ரவரி, 2010

காந்தியின் உளரல்கள்...............

இந்தியா எனும் மாயையில் சிக்கித்தவிப்பவர்களெல்லாம் தூக்கிப்பிடிக்குமளவுக்கு, காந்தியார் ஒன்றும் புனிதமானவரில்லை என்பது உண்மைதான்.
”விடுதலைவீரர்” “ அஞ்சாநெஞ்சன்” நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் அவர்களை, வெள்ளையர்களிடம் ஒப்படைப்பதாகச் சம்மதக்கையொப்பம் இட்டவர்தான் இவர்.

எனினும் , ஆதாரமில்லாத் விடயங்களை வைத்துக் குற்றஞ்சாட்டுதலைத்தவிர்த்துக்கொள்ளல் நல்லது என்று நினைக்கிறேன்.

காந்தியின் பெண்கள்

விக்கிபீடியா மூலமாகவும் ரிச்சர்ட் அட்டன்பரோ மூலமாகவும் மட்டுமே காந்தியை அறிந்து வைத்திருப்பவர்களுக்கு இந்தக் கட்டுரை நிச்சயம் அதிர்ச்சியை ஏற்படுத்தும். ஏற்படுத்தியிருக்கிறது.

காந்தி இப்படிப்பட்டவராக இருப்பார் என்று நான் நினைத்தே பார்க்கவில்லை, it's shocking என்கிற ரீதியில் சிலர் இந்தக் கட்டுரைக்கு எதிர்வினை புரிந்துள்ளனர். ஒப்பற்ற உன்னத தலைவர் என்றல்லவா எண்ணியிருந்தோம் என்று சிலர் திகைத்திருக்கிறார்கள். சிலர் சீறியிருக்கிறார்கள். நாம் அதிகம் மதித்த ஒரு நபர் என்பதற்காகவே அவர் மீது இப்படி சேறு பூசலாமா? மற்றவர்கள் செய்யாததையா இவர் செய்துவிட்டார்? சிலர் காந்தியைத் தாங்கி பிடித்திருக்கிறார்கள். அவர் சொன்னதில் என்ன தப்பு? அபத்தமாக எதையும் அவர் சொல்லிவிடவில்லையே!

பெண்கள் பற்றி காந்தியின் சிந்தனைகள் எவ்வாறு இருந்தன? இதுதான் கட்டுரையின் சாரம். மூன்று விஷயங்களை மட்டும் சுருக்கமாகப் பார்க்கலாம்.

1) ஒரு பெண் பாலியல் ரீதியாக பலவந்தப்படுத்தப்பட்டால், தாக்கப்பட்டால் அதற்குக் காரணம் அந்தப் பெண்தான்.

2) பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு பெண் தனது மனிதத்தன்மையை இழந்துவிடுகிறார்.

3) ஒரு தகப்பன், தன் குடுமபத்தின் மானத்தைக் காக்க, பாலியல் வன்முறைக்கு ஆளான தன் மகளைக் கொன்றுபோடலாம்.

இந்தக் கடைசி கருத்தை மட்டும் போனால் போகட்டும் என்று பிற்காலத்தில் சற்றே தளர்த்திக்கொண்டிருக்கிறாராம் காந்தி.

கட்டுரையின் கடைசி வரி இது. நினைவிருக்கட்டும். புனிதர் என்று யாரும் இங்கே இல்லை.

யாரோ ஒரு Michael Connellan ஏதோ ஒரு நாட்டில் இருந்துகொண்டு எதையோ சொன்னால் அதை எப்படி நம்புவது என்று சிலர் கேட்கலாம். காந்தியின் படைப்புகளில் இருந்து அவர் எழுத்துகளிலேயே இந்தக் கருத்துகளைத் திரட்டித்தர முடியுமா என்று பார்க்கிறேன்.

Read more...

மும்பை மராத்தியர்களுக்குத்தான் உரிமையானது - மகிழ்நன்

இப்படிச் சொல்ல எனக்கென்ன தகுதியிருக்கிறது என்றால், மும்பையில் பிறப்பிலிருந்து 25 ஆண்டுகள் வசித்திருக்கிறேன். மராத்தியர்களே என் பதின்வயது தொடங்கி முடியும்வரை நெருங்கிய நண்பர்களாக இருந்திருக்கிறார்கள், என்னுடைய பிறப்பு சான்றிதழ் மும்பையில் பிறந்ததாகத்தான் இருக்கிறது. மும்பையில்தான் எனது கல்வியை முடித்திருக்கிறேன். இம்மண்ணின் மொழியாகிய மராத்தி உட்பட ஓரளவு சரளமாக கற்றிருக்கிறேன். ஆக, நான் மண்ணின் மைந்தனாக இல்லாவிட்டாலும் இம்மண்ணில் நீண்ட கால விருந்தினன் என்ற முறையில் என்னுடைய கருத்தை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். இதுதான் என் நன்றிக்குரிய செயலாக இருக்கும் என்று கருதி இந்த பதிவை வெளியிடுகிறேன்.
இங்கே இரண்டே செய்திகள்தான் விவாதிக்கப்பட இருக்கிறது..........

ஒன்று மும்பை மராத்தியர்களுடையது என்ற வாதம்.............

மற்றொன்று மும்பை மராத்தியர்களுடையதே என்ற வாதம்............

இங்கே மொழிப்போர் நடத்திய பெருமை கொண்ட தமிழர்களின் குரலும் ஒலித்திட வேண்டும்.............யார் பக்கம்? என்பது தலைப்பிலேயே தெரிந்திருக்கும்.....


மும்பை இந்தியர்களுடையதா?

இந்தியா என்று கூறப்படும் கூட்டமைப்பிற்கு உள்ளிட்ட பகுதிகளில் எப்பகுதிகளிலும் சென்று வாழலாம், தொழில் தொடங்கலாம்........என்றெல்லாம் பரந்த மனப்பான்மையோடு கூறப்படுவது போன்ற உருவகம் தரக்கூடிய சொற்களை, வாதத்தை..........

“யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்று கூறிய தமிழ்பாட்டனாரின் வழித்தோன்றல்கள் நாங்கள் மறுத்து கூறுகிறோம்,

“மும்பை இந்தியர்களுடையதல்ல........”

இந்தியர்களுடையதா இல்லையா என்று தீர்மானிக்கும்முன் இங்கே வீற்றிருக்கும் அரசுகளும், அரசியல் கட்சிகளும் முதலில் இந்தியர்கள் யார்?என்ற கேள்விக்கு பதிலளிக்கட்டும்....
இந்தியர்கள் யார்?

உழைக்கும் மக்களா? சுரண்டும் பெருமுதலாளிகளா?

யாருக்கான நாடாக இந்நாட்டை 60 ஆண்டுகளில் கட்டியமைத்திருக்கிறார்கள்.........?

உழவன் ஒருபுறம் தற்கொலை செய்து கொண்டு சாக, மறுபுறம் தன் மனைவிக்கு ஹெலிகாப்டர் வாங்கி பரிசளிக்கும் பெருமுதலாளியின் இருப்பு இந்திய போலி தேசியத்தில்...எப்படி சாத்தியமானது?

இந்தியர்கள் அனைவருக்கும் இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உரிமை உண்டென்று கொஞ்சம்கூட பொது அறிவில்லாது ராகுல் காந்தி குறிப்பிடுகிறார்.........

ஒரே ஊரில் வசித்தாலும், தாழ்த்தப்பட்டவனுக்கு ஆதிக்கச்சாதிக்காரர்கள் வசிக்கும் பகுதிகளில் சுதந்ததிரமாக நடமாட உரிமை இன்றளவும் மறுக்கப்படுகிறதே? சேரிகள் இந்தியாவில் இல்லையா? அல்லது......சேரிகளிலிருந்து ஆதிக்கச்சாதிகள் வசிக்கும் தெருவுக்கு ஏதேனும் கடவுச்சீட்டு வழங்கும் சட்டவரைவு கொண்டுவரப்பட இருக்கிறதா?

இப்படியெல்லாம் கேள்விகள் கேட்டு விடக்கூடாது என்பதற்காகவே வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு இந்தியா என்று விளக்கி, விளக்கி அந்த சொற்கள் தேய்ந்து விடும் அளவுக்கு விளக்கிவிட்டனர்..

கொஞ்சம் கூர்ந்து கவனித்தால், இந்தியா என்னும் நாடு வேற்றுமை பாராட்டுவதில் ஒற்றுமை காண்கிறது அவ்வளவே.........

சாதி, மதம், வர்க்கம் என ஒடுக்குமுறைகளின் முன்மாதிரிதானே இந்தியா.............

சாதிய பேதமில்லா, மத பேதமில்லாம், வர்க்க பேதமில்லா நாடாக இந்தியா என்றாவது விளங்கியிருக்கிறதா?

ஆண்டாண்டுகாலமாக உழைத்து ஓடாய் தேய்ந்துபோன உழைப்பாளிக்கு உரிமையில்லாத நாடு வந்தேறிகளுக்கும் , அடிவருடிகளுக்கு சொந்தமானது என்று சொன்னால் நாம் ஏற்றுக்கொண்டு விடுதலை நாளில் மிட்டாய் வாங்கி சப்பிக் கொண்டு போவதுதான் நாம் இந்த தேசியத்திற்கு செய்யும் நன்றிக்கடனாகுமோ.....?

சொந்த நாட்டு மக்களின் மீது நவீன தொழில்நுட்ப ஆயுதங்களை பயன்படுத்தி Operation Green Hunt என்ற பெயரில் கொல்லத்துடிக்கும் இந்த ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகள் ஆட்சி செய்யும் நாடு நமதானதாக இருக்க முடியுமா?

சரி......மும்பை மராத்தியர்களுடையதா?

ஆம், மும்பை மராத்தியர்களுடையதுதான்....
ஆனால், இதை பேசும் தகுதி சிவசேனை, மராட்டிய நவநிர்மாண் சேனா போன்ற கட்சிகளிடம் இருக்கிறதா?

மும்பையில் வாழும் மராத்தியர்கள் தங்கள் தாய்மொழியில் அடிப்படை கல்வியிலிருந்து, மேற்கல்வி வரை கற்க நடைமுறைப்படுத்திவிட்டது போல் குதிக்கின்றன இந்தக்கட்சிகள். இத்தனை ஆண்டு காலம் மக்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு அதற்கு வடிகாலாக வாக்குச்சீட்டை பயன்படுத்தி ஆட்சிக்கு வருவதை தமிழகத்து திமுகவிடமிருந்து கற்றுக் கொண்டதோ என்னவோ? இன்றும் அதே ஆயுதத்தை பயன்படுத்தி மீண்டுமொருமுறை ஆட்சிக்கு வர துடிக்கிறது இது போன்ற கட்சிகள்.........(இதில் கருணாநிதி சிவசேனையை கண்டித்திருப்பது நகைமுரண்).

மராத்தியர்களை மராத்தியர்களாக தங்களை சிந்திக்கவிடாமல் ஆர்.எஸ்.எஸ் பிஜேபியின் பிள்ளைபோல் மராத்தியர்களுக்கு மொழிவுணர்வையும் மீறி மதவுணர்வை தூண்டிவிட்டுவிட்டு, இன்று குதிப்பதற்கு ஏதாவது தகுதியிருக்கிறதா?என்றால் இல்லவே இல்லை என்பதுதான் பதில்............

சுறுக்கமாக கூறினால், மும்பை மராத்தியர்களுடையதுதான், அதை பேசும் தகுதிதான் சிவசேனைக்கு இல்லை. பக்குவமாக சிந்திக்க தெரிந்த மக்கள் நல இயக்கங்கள் இது போன்ற உரிமைச்சார்ந்த பிரச்சினைகள் கையிலெடுத்தால் கண்டிப்பாக ஆதரிக்கலாம், மதவாதம் பேசும் சிவசேனையை வெகுமக்கள் நலனில் அக்கறை கொண்ட நம்மால் ஆதரிக்க முடியாது என்பதே நம் நிலைப்பாடு.

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP