வெள்ளி, 27 நவம்பர், 2009

பகத்சிங்கின் கடைசி நிமிடங்கள்



பகத்சிங்கின் கடைசி நிமிடங்கள்
1931 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் தேதி மாலை 4 மணி. விரிந்து பரந்த லாகூர் சிறைச்சாலையின் உயர்மட்ட அதிகாரி, சிறையின் அறைக்கதவுகளை ஒவ்வொன்றாக வேகமாக தன் பலமுள்ள மட்டும் இழுத்துச் சாத்திப் பூட்டுப் போட்டுக் கொண்டே வருகிறார். அவருடன் தடபுடலாக பத்துப் பதினைந்து துணை அதிகாரிகள், கைகளில் கொத்துச் சாவிகளுடன் உயர்மட்ட அதிகாரியின் வேகத்திற்கு ஈடுகொடுத்தும், அவருக்கு பாதுகாப்புக் கொடுத்துக் கொண்டும் வருகின்றனர்.ஒவ்வொருநாள் மாலையும் ஏழு மணிக்கு வெளியிலிருப்பவர்களை உள்ளே போகச் சொல்லி, அவர்கள் உள்ளே சென்றவுடன் பூட்டி விட்டு, அவசரமில்லாமல் பொறுமையாகச் செல்லக்கூடிய இவர் அன்று மிகுந்த பதற்றத்துடன், பரபரப்புடன் காணப்பட்டார். ஜலந்தரிலிருந்து வெளிவரும் ‘டெய்லி பிரதாப்’ என்ற நாளிதழின் ஆசிரியர் வீரேந்திரா, விடுதலைப் போரில் வீறுகொண்டு ஈடுபட்டதன் காரணமாக, ஆங்கிலேய ஆதிக்க வெறிகளால் அதே சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் மட்டுமல்ல... அவரைப் போன்று நூற்றுக்கணக்கானோருக்கு அங்கு அதே நிலைதான்.வீரேந்திரா தனது நினைவுக் குறிப்பில், “அன்று மதியம் இரண்டு மணிவரை, ‘நாளைதான் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட இருக்கிறார்கள்’ என்று எண்ணியிருந்தோம். மார்ச் 24 ஆம் தேதிதான் தூக்கிலிடப்படவேண்டும் என்று பகத்சிங் வழக்கை விசாரித்த நீதிபதியே தனது தீர்ப்பில் கூறியிருந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு வெளிவந்த செய்தித்தாளில் மார்ச் 24 ஆம் தேதி தூக்கிலிடப்ப்படுவதாக செய்தியும் வெளிவந்தது” என்று குறிப்பிடுகிறார்.மதியம் இரண்டு மணி சுமாருக்கு பகத்சிங்குடன் தொடர்பு வைத்திருந்த அந்தச் சிறையின் கன்விக்ட் வார்டர் ஒருவர், வீரேந்திராவிடம் பகத்சிங்கை அன்றைய தினமே தூக்கிலிடப்படும் செய்தியை சொல்லியனுப்பினர். இந்தச் செய்தி கேட்ட வீரேந்திராவும் மற்ற தோழர்களும் நெஞ்சில் நெருப்பை அள்ளிக் கொட்டினதைப் போன்றதோர் அதிர்ச்சி அடைந்தனர்.செய்தி சொன்ன கன்விக்ட் வார்டரிடம் கண்ணீர் மலக, “நீ மீண்டும் பகத்சிங்கைப் பார்த்து எனக்கு அவர் நினைவாக ஏதெனும் ஒரு பொருளைப் பெற்று வா” என்று வீரேந்திரா நிலைதடுமாறிய நிலையில் சொன்னார். நீண்ட நேரத்திற்குப் பிறகு பகத்சிங் வெள்ளை நிற சீப்பொன்றையும், ஒரு பேனாவையும் அன்புப் பரிசாகக் கொடுத்தனுப்பினார். அந்தச் சீப்பின் மீது ‘பகத்சிங்’ என்று தனது பெயரை பகத்சிங்கே பொறித்து அனுப்பியிருந்ததைப் பார்த்து தாரை தாரையாக கண்ணீர் விட்டார் வீரேந்திரா.அப்போதெல்லாம் சிறைவிதியின்படியும், நடைமுறைப் பழக்கப்படியும் குளிர்காலமாக இருந்தால் காலை 8 மணீக்கும் வெயில் காலமாக இருந்தால் 7 மணிக்கும் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவர். மார்ச் 24 ஆம் தேதி தீர்ப்புப்படியும், நடைமுறைப்படியும் காலை 7 மணிக்குத் தூக்கிலிடுவர் என்று நினைத்து, அடுத்த நாள் அந்தத் துக்கச் சம்பவம் நடக்க இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாமல் துடித்த சிறையின் மற்ற கைதிகளுக்கு அன்றே ... இன்னும் சில மணித்துளிகளில் ... பகத்சிங்கும் தோழர்களும் தூக்கில் தொங்கப் போகிறார்கள் என்பதைக் கற்பனையிலும்கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை.லாகூர் சிறையின் வரலாற்றில் அப்படிவோர் அதிரடிச் சம்பவம் அதற்கு முன்பு நடந்ததேயில்லை. தன்னுடைய அரசின் நீதிமன்றத் தீர்ப்பையே அவசர அவசரமாக தானே மீறுகிற கொடுமை அங்கு அதுவரை யாராலும் கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.“பகத்சிங்கை விடுதலை செய்” என்ற முழக்கத்துடன், ஆக்ரோஷமான முறையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் புறப்பட்டுவிட்டனர். அவர்கள் லாகூர் சிறைக்கதவுகளை நொறுக்கி, உள்ளே நுழைந்து, இரவோடு இரவாக பகத்சிங்கை விடுவித்து வெளியே அழைத்துச் சென்று விடுவார்களோ என்ற அச்சத்தின் விளைவே ஆங்கிலேய அரசின் இந்த அவசரம்.தூக்கிற்கு முன் ஆண்டவரைப் பிரார்த்தித்திற்கும்படி பகத்தின் தந்தை அவரிடம் கூறினார். அதற்கு பகத்சிங், “தந்தையே! என் வாழ்நாளில் நான் ஆண்டவரைப் பிரார்த்தித்ததில்லை. வேண்டுமானால் என் தேசத்தவர் துயர்ப்படுகிறார்கள் என்பதற்காக ஆண்டவரைத் திட்டியிருக்கிறேன்! இந்நிலையில் மரணத்தைத் தழுவும் நான் அவரை நோக்கி வணங்கினால் என்னை கோழை என்று ஆண்டவர் நினைத்துக் கொள்வார். என் இருபத்துமூன்றாண்டு கால வரலாற்றில் ஒரு விநாடிகூட கோழையாக இருக்க நான் விரும்பவில்லை” என்று திடமனதுடன் பதில் கூறினான் என்று சிறை அதிகாரி குறிப்பிடுகிறார்.“நூற்றுக்கணக்கான கைதிகள் தூக்கிலிடப்பட்டதை நேரடியாக அதிகாரி என்ற முறையில் அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். ஆனால், பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய மூவரும் தெளிவாகவும், மிகுந்த தைரியத்துடனும், சலனமில்லாமலும் தூக்கு மேடையை நோக்கி வீரத்துடன் சென்றது போன்று இதுவரை தூக்கிலிடப்பட்ட எவரையும் நான் பார்த்ததில்லை” என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.மாலை 7 மணி லாகூர் சிறை முழுக்க மயான அமைதியில் ஆழ்ந்திருந்தது. காற்று வழியே இச்செய்தி சிறையில் அடைக்கப்பட்டிருந்த மூவாயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகளின் காதுகளை எட்டியது. வார்த்தையால் வர்ணிக்க முடியாத அளவுக்கு துக்கம் தொண்டையை அடைக்க, ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல் மௌனம் காத்தனர்.“இன்குலாப் ஜிந்தாபாத்”, “இன்குலாப் ஜிந்தாபாத்” என்ற முழக்கத்துடன் விடைபெற்றனர் வீரமறவர்கள்.இந்த இடிமுழக்கத்திற்கு ஈடுகொடுத்து, லாகூர் சிறையின் மதிற்சுவர்களில் பட்டு தெறித்தது பல்லாயிரம் தோழர்களின் பதில் முழக்கம். ஒரு மணி நேரம் லாகூர் சிறையே அதிரும் அளவுக்கு கோஷம் போட்ட பின்னர், சொல்லி வைத்தாற் போன்று மீண்டும் அமைதி நிலவியது!ஆம் காற்றில் கலந்த பேராசை இன்னும் நம் இதயத்தை எரியவிட்டுக் கொண்டேயிருக்கிறது!

0 கருத்துகள்:

About This Blog

வலைப்பதிவு காப்பகம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP