கூட்டணிக்கு வெடியா...?
29.08.10 கவர் ஸ்டோரி |
கூட்டணியைப் பற்ற¤ குறை கூறி குத்திக் குடைகிற வேலை எல்லாம் வேண்டாம்’’ என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தடையுத்தரவே பிறப்பித்திருந்தாலும் அதைப் பற்றியெல்லாம் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. தங்குதடையின்றி அவரது தாக்குதலைத் தொடர்ந்து வருகிறார். கடந்த 20-ம் தேதி, ‘‘சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் பெயரைச் சூட்ட வேண்டும்’’என்று கோரி, காங்கிரஸ் ‘நட் பகம்’ சார்பில் உண்ணாவிரதம் நடந்தது. கவிஞர் ஜோதி ராமலிங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சிக்குத் தலைமையேற்றவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். அங்கே அவருடைய பேச்சு தி.மு.க.-காங்கிரஸ் இரு தரப்பிலும் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டிருக்கிறது. இனி இளங்கோவன் பேசிய பேச்சில் சென்சார் செய்யப்படாத சில பகுதிகள் இதோ. ‘‘காங்கிரஸில் பொறுப்பில் இருக்கும் சிலர் ராஜிவ் பிறந்தநாளில் ஜவ்வு மிட்டாய் கொடுத்து விட்டு, ‘விழாவைக் கொண்டாடி விட்டோம்’ என்று பேப்பருக்கும்,டெல்லிக்கும் அறிக்கை சமர்ப்பித்து விட்டு இருந்து விடுகிறார்கள். ஆனால், ராஜிவ் காந்தியின் பிறந்தநாளைக் கொண்டாடும்போது சில உருப்படியான காரியங்களைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறவன் நான். இங்கே அரசு பொதுமருத்துவமனைக்கு ராஜிவ் பெயரைச் சூட்ட வேண்டும் என்று நாங்கள் சொல்வது ராஜிவுக்குப் புகழ்சேர்க்க வேண்டும் என்பதற்காக அல்ல.அவரது பெயரைச் சூட்டுவதன் மூலம் நீங்கள் புகழைச் சேர்த்துக்கொள்ளுங்கள் என்பதற்காகத்தான். ‘உண்ணாவிரதம்’ என்று சொல்லிவிட்டு பல பேர் அங்கே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே கூவம் அருகே உண்ணாவிரதம் நடத்த இடம் கொடுத்தால் கண் டிப்பாக அங்கே சாப்பிட முடியாது’ என்பதால்தான் நமக்கு இங்கே இடம் கொடுத்திருக்கிறார்கள் போலிருக்கிறது.இப்படி பல கில்லாடித்தனங்களைச் செய்யக்கூடிய அரசு இது. ஊழலைச் செய்தாலும் அதை விஞ்ஞான ரீதியாக செய்யக்கூடிய அரசாங்கம் இது. மாட்டிக்கொள்ளக் கூடாது என்ற ஒரே நோக்கத்தில் நுணுக்கமாக பலப்பல காரியங்களைச் செய்வதில் இவர்கள் வல்லவர்கள். இப்போது இவர்கள்தான் நம்மை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். ராஜிவ் காந்தியின் பெயரை அரசு பொது மருத்துவமனைக்கு சூட்டுவதில் அரசுக்கு என்ன பிரச்னை இருக்கின்றது என்று எனக்குத் தெரியவில்லை. இத்தனைக்கும் நம்முடைய தயவில்தான் இவர்கள் இங்கே ஆட்சி செய்துகொண்டிருக்கிறார்கள்.நாம் இல்லையென்றால் முதல்வரும் கிடையாது, துணை முதல்வரும் கிடையாது. மத்தியில் இருக்கின்ற ஒருவர் மிச்சமாக இருப்பார்.அவரும் வேண்டாம் என்றால்,அவரும் இருக்க முடியாது. நாங்கள் என்ன கேட்கின்றோம்? அடித்த கொள்ளையில் பங்கு கேட்கிறோமா? இல்லை பதவிகளில் பங்கு கேட்கிறோமா? எங்கள் தலைவர் ராஜிவ் காந்தியின் பெயரை அரசு பொது மருத்துவமனைக்கு வையுங்கள் என்றுதானே கேட்கிறோம்? ராஜிவ்காந்தியின் பெயரை ஜி.எச்சிற்கு வைக்கச் சொன்னால்,அதற்கு மழுப்பலும், வழுப்பலும்தான் பதில் என்று சொன்னால் என்ன நியாயம்? மிகத் தெளிவாகச் சொன் னால் ‘கோபம் வருகின்றது. வலி, வலி’ என்று சொல்கிறார்.இப்படியே பண்ணிக் கொண்டிருந்தால் வலிக்காமல் என்ன செய்யும்? நல்ல காரியங்களை செய்யச் சொன்னால் ஏன் கோபம் வருகிறது? உடனே டெல்லிக்கு கோள் மூட்டுவதற்கு ஓர் ஆணையும், பெண்ணையும் அனுப்பி விடுகிறார்கள். வாரம் தவறினாலும் என் மீது கோள் சொல்ல ஆள் அனுப்புவது தவறுவதே கிடையாது. எனக்கு அதைப்பற்றி கவலையில்லை. நான் மந்திரியாகவும் இருந்தவன், சாதாரண தொண்டனாகவும் இருந்தவன். ஏதோ காங்கிரஸில் பவுடர் போட்ட இரண்டு,மூன்று அரசியல்வாதிகளை நீங்கள் பணக்காரர்களாக ஆக்கிவிட்ட காரணத்தால் காங்கிரஸ்காரர்கள் எல்லாம் உங்களுக்கு அடிமை என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் மன்னிக்க வேண்டும்.காங்கிரஸ்காரர்களைப் பற்றி தவறாக எடை போடாதீர்கள். நீங்கள் வளர்த்துவிட்ட 2பேரில் ஒருவரை இயற்கை அழைத்துக் கொண்டு விட்டது.இன்னொருவர் கொஞ்சம் பவுடர் எல்லாம் அதிகமாக போட்டுக்கொண்டு இருக்கிறார். ஒரு பவுடர் போட்ட மனிதர் மட்டுமே காங்கிரஸ் என்பது கிடையாது.காங்கிரஸ் என்பது மக்களோடு மக்களாக இருக்கின்ற மக்கள் சக்தி என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ![]() எல்லா இடத்திலேயும் ஒரு திருஷ்டி பரிகாரம் இருப்பதுபோல் காங்கிரஸ் கட்சியிலும் ஒன்றிரண்டு திருஷ்டி பரிகாரங்கள் இருக்கலாம்.அதுதான் காங்கிரஸ் என்று எடுத் துக்கொண்டால் பாவம் ஏமாறப் போவது நீங்கள்தான். உங்களைக் கண்டிக்க வேண்டும், திட்ட வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் எனக்குக் கிடையாது.முடிந்தால் உங்களை திருத்திப் பார்க்கலாம் என்பதுதான் எனது நப்பாசை. அது முடியாது என்றுதான் நினைக்கிறேன். என்ன செய்வது? சிலவற்றின் வாலை நிமிர்த்தவே முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும். ராஜிவ் காந்தியின் பெயரை வைப்பதில் உங்களுக்கு என்ன நஷ்டம் என்று எனக்குத் தெரியவில்லை? வேண்டுமென்றால் கவிஞர் ஜோதி ராமலிங்கத்தை நீங்கள் கலந்து கொள்கிற விழாவிற்கு வரச் சொல்லி உங்களை வாழ்த்தி கவிதை பாட வேண்டும் என்றால் பாடச் சொல்கின்றேன். அதற்குப் பிறகாவது வைப்பீர்களா? இல்லை, ஊரெல் லாம் உங்களுக்கு டிஜிட்டல் பேனர் வைக்க வேண்டும் என்று சொன்னால் அதற்கும் நாங்கள் தயார்.உலகத்திலேயே உங்கள் குடும்பம்தான் முதல் குடும்பம் என்று சொல்லச் சொன்னால் கூட அதையும் நாங்கள் செய்யத் தயார்.அப்போதாவது ராஜிவ் பெயரை வைப்பீர்களா? ‘நாடாள வந்தவனே, நீ இந்த நாட்டை ஆள வேண்டும். இந்த நாட்டு மக்கள் உனக்கு அடிமை’ என்று எழுதிக் கொடுக்கச் சொல்கிறீர்களா? கூவம் நதியிலேயே எழுதிக் கொடுத்து விடுகின்றோம். (பலத்த சிரிப்பு) தீவிரவாதத்துக்காக உயிர்விட்ட ஒரு மகானின் பெயரை அரசு பொது மருத்துவமனைக்கு வையுங்கள் என்று சொன்னால்,அதற்கு நீங்கள் முடியாது என்று சொன்னால் என்ன அர்த்தம் என்று எனக்குத் தெரியவில்லை. அப்படித்தான் ராதாபுரத்திலே நீங்கள் ஒரு பெரியவர், அம்மையார் சிலையை வைத்தீர்கள். அதை நாங்கள் ஆட்சேபணை செய்யவில்லை. உள்ளூர்க்காரர்கள் செய்தார்கள். அதுவேறு விஷயம். அந்த ராதாபுரம் பேருந்து நிலையத்திற்கு காமராஜர் பெயரை வைக்கவே எவ்வளவு போராட வேண்டி யிருந்தது? 92-வயதான சுடலைமுத்து நாடார் என்ற தியாகி, சாகும்வரை அதற்காக உண்ணாவிரதம் இருந்தார்.அவரைப் பிடித்து நீங்கள் ஜெயிலில் அடைத்தீர்கள். அங்கும் அவர் உண்ணாவிரதம் இருந்ததால் அவரது உயிருக்கு ஆபத்து என்ற நிலை வந்தபிறகுதானே காமராஜர் பெயரை வைக்க நீங்கள் முடிவு செய்தீர்கள்? பெயர் வைப்பதில்தான் நீங்கள் மன்னராயிற்றே? பத்தாயிரம் ரூபாய்க்கு ஒரு சின்ன பாலம் கட்டினால்,பதினைந்தாயிரம் ரூபாய்க்கு பெரிய போர்டு வைப்பீர்களே! காங்கிரஸ்காரர்கள் அப்படி செய்யாததால்தான் 67-ல் தோற்றோம். இப்போதும் கூட மத்திய அரசாங்கம் கொண்டுவரும் நல்ல திட்டங்களைக்கூட நாங்கள் சொல்வதில்லையே. இப்போதுதான் அது எங்கள் புத்தியிலே உறைத்து குமரியில் இருந்து தொடங்கி தமிழகம் முழுவதும் மத்திய அரசின் சாதனையை எடுத்துச் சொல்ல யாத்திரை வந்து கொண்டிருக்கிறோம். அருமைத் தலைவி சோனியாகாந்தி பாராளு மன்றத்தின் நமது எம்.பி.க்கள் கூட்டத்தில் பேசும் போது, ‘பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற நீங்கள் மத்திய அரசு மக்களுக்காகப் போடுகின்ற நல்ல திட்டங்களை மக்களிடையே எடுத்துச் சொல்ல வேண்டும்’ என்று சொல்லி கூடவே, ‘சில மாநிலங்கள் மத்திய அரசின் திட்டங்களை தங்களுடைய திட்டங்களாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்’என்றும்சொல்லியிருக்கிறார்.சோனியா பெருந்தன்மை யானவர், பரந்த உள்ளத்துக்குச் சொந்தக்காரர் என்பதால் பெயர் சொல்லாமல் ‘சில மாநிலங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். ![]() ஆனால்,நான் கொஞ்சம் வேறுபட்டவன்.அதுவும் கூவத்தின் அருகில் நிற்பதால் சொல்கின்றேன். மத்திய அரசின் எல்லா திட்டங்களையும் தங்களுடைய திட்டம் என்று சொல்வது தமிழக அரசுதான். ‘108’ என்ற ஆம்புலன்ஸ் திட்டம் என்பது முழுக்க முழுக்க மத்திய அரசின் திட்டம்.இந்தத் திட்டம் தமிழக அரசின் திட்டமாக இருந்தால் ஆம்புலன்ஸின் ஒரு பக்கம் முதல்வர் படமும், மறு பக்கம் துணை முதல்வர் படமும் இருக்குமா, இல்லையா? அவர்கள் படம் இல்லை என்பதில் இருந்தே இது மத்திய அரசின் திட்டம் என்று தெரிகிறதல்லவா? இது போன்ற பில்டப்கள் எதற்கு? எப்போதுமே அடுத்தவர் வீட்டில் இருப்பதுதான் பலருக்கு விருப்பம். சொந்த வீட்டில் இருப்பது அவர்களுக்கு... (கைதட்டல்) நான் சொல்வதை நீங்கள் தப்பாக எடுத்துக் கொள்ளக் கூடாது. சிந்திக்க வேண்டும். இன்றைக்கு காங்கிரஸ்காரர்கள் உஷாராக இருக்கின்றார்களோ இல்லையோ மக்கள் உஷாராக இருக்கிறார்கள்.நாட்டு மக்கள் பயன் பெறுகிறார்களா? அல்லது ஒரு குடும்பம் பயன் பெறுகின்றதா?என்பது போன்ற எல்லா விஷயங்களும் மக்களுக்குத் தெரிகிறது.67-க்குப் பிறகு நாம் ஆட்சியில் இல்லை. இன்னும் எவ்வளவு ஆண்டுகள் வேண்டுமானாலும் நம்மால் காத்திருக்க முடியும்.காரணம் பதவி என்பது நமக்கு உணவு போன்றது கிடையாது.ஆனால் மற்றவர்களுக்கு அப்படி முடியாது.பதவி இல் லையென்றால் அவர்களால் இருக்க முடியாது.நம்மைப் பொருத்தவரை பதவி இல்லையென்று சொன்னாலும்,சாலைகளில் கதர் சொக்காயை போட்டுக்கொண்டு காலரை தூக்கிவிட்டு பெருமையாக நடக்க முடியும். ஆனால் அவர்களால் அப்படி நடக்க முடியாது. அந்தக் காலத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் தோளில் துண்டை போட்டுக் கொண்டு ரோட்டில் நடந்தால் ரோடே சுத்தமாகி விடும்... காரணம், அந்த அவ்வளவு பெரிய துண்டு போட்டுக் கொண்டு நடப்பார்கள். அவசர கால நிலை வந்தபோது அந்தத் துண்டுகள்,கரை வேட்டிகள் எல்லாம் எப்படி காணாமல் போயின என்று தெரியும். ‘என்னுடைய தாத்தா, அப்பா காங்கிரஸ்காரர்கள். நான் பேச்சு கேட்பதற்காக அந்தப் பக்கம் போனேன். நான் மீண்டும் என் அப்பா வழிக்கு வந்துவிட்டேன். தயவுசெய்து என்னை உள்ளே போடாதீர்கள்’ என்று சொன்னவர்கள்தானே இவர்கள்?இன்றைக்கு வீர தீரமாக,வீரத்தில் இவருக்கு ஈடு இணை யாருமில்லை என்பதுமாதிரி இவர் பேசுகிறார். நான் என்ன தகராறு செய்தேன்?காமராஜர் பெயரை ராதாபுரம் பஸ் ஸ்டாண்டிற்கு வைக்க வேண்டும் என்று அங்கிருந்த மக்கள் எல்லாம் விரும்புகிறார்களே,அதைச் செய்யுங்கள் என்று சொன்னதற்கு வம்பு ஆரம்பித்தது.பின்பு மத்திய அரசின் திட்டங்களை தங்களுடைய திட்டம் என்று கூறிக்கொள்ளாதீர்கள் என்று சொன்னபோது கொஞ்சம் அதிகமாகிவிட்டது. பிறகு உங்களுக்கே தெரியும் எதனால் முற்றியது என்று.அதன்பின்பு, ராஜிவ்காந்தி,ராகுல் காந்தி பற்றி தனிப்பட்ட முறையில் கேவலமாகப் பேசினால் தாங்கிக்கொள்ள முடியுமா? அந்தக் குடும்பம் என்ன சாதாரண குடும்பமா?அந்தக் காலத்தில் மோதிலால் காலத்தில் இருந்து அந்த குடும்பத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இந்தியாவிலே பணக்காரர்களில் ஒருவராக இருந்தவர் மோதிலால்.மாளிகை போன்ற தனது சொந்த வீட்டையே நாட்டுக்காக எழுதி வைத்தார். நீங்கள் நினைப்பது போல் ஏதோ ராயப்பேட்டாவிலே ஒரு கோயிலுக்கு முன்னால் இருக்கின்ற ஒன்றரை கிரவுண்ட் வீடு கிடையாது. அது கிட்டத்தட்ட நூறு ஏக்கர் மேல் இருக்கின்ற ‘ஆனந்தபவன்’ என்ற பெயரில் இருந்தது. இன்றைக்கு நான் பேசுவது உடனுக்குடன் ஒரு பெரிய மனிதருக்குப் போய்ச் சேருகின்றது. கேட்க முடிகின்றது. பார்க்க முடிகின்றது என்றால் அதற்கு அஸ்திவாரம் போட்டது ராஜிவ் காந்தி தான். அவருக்கு என்ன பரிசு தந்தோம். நாட்டை பொருளாதாரத்தில் உயர்த்திய அந்த பெண்சிங்கம் இந்திராகாந்திக்கு இந்த நாடு என்ன பரிசு தந்தது?அவர்களின் உயிரை அல்லவா பறித்துக்கொண்டோம்.நாட்டுக்காக உயிர்நீத்த அவர்களின் வாரிசுகள் இன்றைக்கும் அவர்களின் உயிரைப் பற்றி கவலைப்படாமல், நாட்டுக்காக உழைக்கின்றோம் என்று வந்து கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் எவ்வளவு உத்தமமான குடும்பம் என்பதை இருக்கின்ற சில சில்லறைகள் பார்த்து கற்றுக்கொள்ளவேண்டும். நாட்டுக்காக உயிர்நீத்த ராஜிவ்காந்தியின் பெயரை அரசு பொதுமருத்துவமனைக்கு வைக்க வேண்டும் என்று சொன்னால் எத்தனையோ போராட்டம் நடத்த வேண்டியுள்ளது.காந்தியவழியில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால், நமக்கு சுபாஷ்சந்திர போஸின் வழியும் தெரியும். நான் சில விஷயங்களைச் சொன்னால் உங்களுக்கு வலி எடுக்கின்றது. உங்களுக்கு வலி எடுக்கக் கூடாது நிரந்தரமாக ஒரு நிவாரணம் வேண்டும் என்பதற்காகத்தான் சில விஷயங்களை நான் சொல்கிறேன்.நீங்கள் அப்போதுக்கப்போது,அமிர்தாஞ்சன் தடவினால் சரியாகிவிடும் என்று நினைக்கிறீர்கள். ‘சொந்தக் கட்சிக்காரர்களுக்கே ஒன்றும் செய்யாத அவர்கள் நமக்கு எப்படிச் செய்வார்கள்?’ என்று சிலர் கேட்கிறார்கள். உண்மைதான். அண்ணாவின் நூற்றாண்டு விழாவையே சும்மா ஒப்புக்குக் கொண்டாடியவர்கள்தானே இவர்கள்? ‘தன்னை வளர்த்த, இந்தப் பதவியை அடைவதற்கு உதவியாக, ஏணியாக இருந்த தலைவரின் நூற்றாண்டு விழாவையே சிறப்பாகக் கொண்டாடாதவர்கள்,உங்கள் தலைவரின் பெயரை ஜி.எச்சிற்கு எப்படி வைப்பார்கள்?’ என்று விஷயம் தெரிந்த காங்கிரஸ்காரர்கள் சொல்கிறார்கள். நான் சொல்லவில்லை. (இளங்கோவன் கைக்கு ஒரு துண்டுச் சீட்டு வருகிறது அதைப் படித்துவிட்டு) சிவாஜிக்கு இன்னும் மணிமண்டபம் கட்டவில்லை.சிவாஜிக்கு மணி மண்டபம் கட்ட இந்த அரசிடம் பணமில்லையா? பணம் இல்லை என்று சொன்னால் நாங்கள் நன்கொடை வசூலித்துத் தருகிறோம். சென்னையையே வளைத்து வளைத்து விலை பேசுகின் றவர்களுக்கு இது ஒரு பெரிய காரியமா? இப்போது கூட்டணி இருக்கிறது. இன்று மாலை வரை எந்த மாற்றம் இல்லை என்பதை நானும் ஒப்புக்கொள்கின்றேன். ஆனால், எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்று நான் எப்படிச் சொல்ல முடியும்? எங்களைப் பொருத்தவரையில் அம்மையார் (நான் அம்மையார் என்று குறிப்பிட்டது சோனியா காந்தியை) என்ன சொன்னாலும் கேட்போம், தேர்தலின்போது இவர்களோடுதான் கூட்டணி,அல்லது காங்கிரஸ் தலைமையில் இவர்களோடுதான் கூட்டணி என்று அம்மையார் சொன்னாலும் அதனையும் நாங்கள் கேட்போம். எங்களுடைய கருத்துக்கள் ஏற்கெனவே மேலிடத்தில் சொல்லப்பட்டுவிட்டது. தமிழக மக்களுக்கு எது நல்லதோ எந்தவிதமான கூட்டணி அமைந்தால் தமிழக மக்களுக்கு நல்லது என்று மேலிடம் நினைக்கின்றார்களோ அதனை காங்கிரஸ் தொண் டர்கள் ஏற்றுக்கொள்வார்கள். ‘ஜி.எச்சிற்கு ராஜிவ்காந்தியின் பெயரை நீங்கள் வைக்கவில்லையென்றால், நாங்கள் வந்து வைக்கப் போகிறோம்’ என்று இங்கே குறிப்பிட்டார்கள். அது நடக்கப்போகிறது’’ என முடித்துக்கொண்டார் இளங்கோவன். இளங்கோவனின் இந்தப் பேச்சுக்கு அன்று மாலையே சேலத்தில் நடந்த விழாவில் பதிலளிப்பதுபோல பேசியிருக்கிறார் முதல்வர் கருணாநிதி. ‘‘மத்திய அரசின் நிதி, மாநில அரசின் நிதி என்றெல்லாம் இல்லை. எல்லாம் ஒரே கரன்ஸிதான். மத்திய அரசு எந்தத் திட்டங்களைக் கொண்டு வந்தாலும் அதுபற்றி மாநில அரசின் கருத்தைக் கேட்க வேண்டும்.அது நுழைவுத் தேர்வோ அல்லது வரி விதிப்போ எதுவாக இருந்தாலும் சரி.ஆட்சியைப் பற்றி கவலையில்லை’’ என்று பேசியிருக்கிறார் கலைஞர். இதற்கிடையே சென்னையில் ஞாயிற்றுக்கிழமை அ.தி.மு.க.வினர் இல்லத் திருமணங்களை நடத்தி வைத்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, ‘‘அ.தி.மு.க.வின் வெற்றிக்கான கவுன்ட் டவுன் ஆரம்பித்து விட்டது’’ என்று பேசி, அதிரடியைக் கிளப்பியிருக்கிறார். மற்றொருபுறம் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்,‘‘தேர்தல் நேரத்தில் கூட்டணி பற்றி அறிவிப்போம்!’’ என்று சொல்லி பீதியைக் கிளப்பியிருக்கிறார். இளங்கோவன் பேச்சைத் தொடர்ந்து ஜெ., விஜயகாந்த் ஆகியோரது பேச்சை கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஏதோ நடக்கப் போகிறதென அரசியல் வட்டாரங்கள் குறிப்பிடு கின்றன.காரணம்,இந்த காரசாரப் பேச்சுக்கு ஒருவாரம் முன்பு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாவைச் சந்தித்து உரையாடியிருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது! இரா.முருகேசன் - குமுதம் |
0 கருத்துகள்:
கருத்துரையிடுக