புதன், 14 ஏப்ரல், 2010

பாபர் மசூதி இடிப்புக்கு பகிரங்க மன்னிப்புக் கேட்கத் தயாரா?



மன்னிப்பு கேட்பாரா நிதின்கட்காரி?

பாரதீய ஜனதா கட்சியின் புதிய தலைவராக வந்துள்ள நிதின் கட்காரி, தாம்
தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டபின், முதன்முதலாகத் தமிழ்நாட்டிற்கு
வந்து சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறார்.
காங்கிரசிற்குப் பல சவால்களையும் விடுத்துள்ளார். அது குறித்து
சம்பந்தப்பட்டவர்கள் பதில் அளிக்கக் கடமைப்பட்டுள்ளனர்.


அதே நேரத்தில் வேறு சில கருத்துகளையும் அவர் தெரிவித்துள்ளார்.

(1) தீவிரவாதத்திற்குக் காங்கிரஸ் துணை போகிறது. பயங்கரவாதத்தின்மீது
மென்மையான போக்கினைக் காங்கிரஸ் கடைபிடித்து வருகிறது என்று குறிப்-
பிட்டுள்ளார்.

பொதுவாக தீவிரவாதத்தைப் பற்றியோ, பயங்கரவாதத்தைப் பற்றியோ பாரதீய ஜனதாக்
கட்சியோ, அதன் சங் பரிவாரத்தைச் சேர்ந்த எந்த ஒரு அமைப்போ பேசிட,
கருத்துகள் கூறிட தகுதி உடையவைதானா என்பது மிகவும் முக்கியமான
வினாவாகும்.

அவர்கள் தூக்கி நிறுத்த விரும்பும் இந்து மதத்தின் கடவுள்களே கூட
பயங்கரவாதத்தின் சின்னங்கள்தாம். ராமன் கையில் இருக்கும் வில்லும்
அம்பும், பரசு-ராமன் கையில் கொடுக்கப்பட்டுள்ள கோடரியும், சிவபெருமான்
கையில் உள்ள சூலாயுதமும், மகா-விஷ்ணு-வின் கையில் அலங்கரிக்கும் சங்கு
சக்கரமும், சுப்பிரமணியனின் கையில் உள்ள வேலும் அகிம்சையின் சின்னங்களா?
அமைதியின் தூதுவர்களா என்ற கேள்விக்கு முதலில் பதில் சொல்லியாகவேண்டும்.

இந்துக்கடவுள்கள் சண்டை போட்டிருக்கின்றன. மனிதர்களைக் கொலை
செய்திருக்கின்றன. தலைகளை சீவியிருக்கின்றன. பெண்களைக் கற்பழித்து
இருக்கின்றன. பஞ்சமா பாதகங்கள் என்று சொல்லப்படும் அத்தனைப் பழிகளையும்
இந்துக் கடவுள்கள் செய்திருக்கின்றன. இவற்றை அவர்களால் மறுக்க முடியுமா?

(2) பாரதீய ஜனதா, சங் பரிவார் கூட்டம் நாளும் நாட்டில் மதக்
கலவரங்களுக்குக் கத்தியைத் தீட்டி வருகின்றன. பல இடங்களிலும் நடந்துள்ள
மதக் கலவரங்களுக்கு இந்த அமைப்புகள்தாம் காரணம் என்று அதிகாரபூர்வமான
ஆணையங்கள், ஆதாரபூர்வமான கருத்துகளைத் தெரிவிக்கின்றன.

காந்தியார் படுகொலை எந்தப் பின்னணியில்? கான்பூர் கலவரம், மகாராட்டிர
மாநிலத்தில் சிமி அலுவலகமுன் குண்டு வெடிப்பு (பெண் சாமியார்கள்வரை
சிக்கவில்லையா?) சங் பரிவார் கும்பலின் தொடர் வன்முறை நடவடிக்கைகளை
அம்பலப்படுத்தவில்லையா?

இராணுவ அதிகாரிகளே சம்பந்தப்பட்டிருந்தனரே! இராணுவத்தில் மட்டுமே
பயன்படுத்தப்படும் ஆர்.டி.எக்ஸ். மற்றும் அம்மோனியம் நைட்ரேட் வெடி
மருந்து எப்படி வெளியில் வந்தது? இராணு-வக் கல்லூரியில் வைத்தே
வன்முறையாளர்கள் தயாரிக்கப்பட்டனரே! மாலேகான் குண்டு வெடிப்பின்
பின்னணிக் கர்த்தாக்கள் யார்?

இந்து ராஜ்ஜியத்தை ஏற்படுத்த இசுரேல் வரை இவர்களின் கைகள் நீண்டு இருந்த
தகவல்கள் எல்லாம் வெளியே வரவில்லையா?

குஜராத் மாநிலத்தில் அரச பயங்கரவாதமாக சிறுபான்மை மக்கள் கொன்று
குவிக்கப்பட்டனரே. யார் காரணம்? பின்னணி என்ன? உச்சநீதிமன்றமே நீரோ
மன்னன் என்று நரேந்திர மோடியை விமர்சித்ததன் காரணம் என்ன?

மூவாயிரம் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதற்குக் காரணமாக இருந்தவர்களா
பயங்கர வாதத்தைப் பற்றிப் பேசுவது?

இஸ்லாமிய மக்களின் வழிபாட்டுத்தலமான பாபர் மசூதியை பட்டப்பகலில்
கடப்பாரைகளையும், மண்வெட்டிகளையும், கோடரிகளையும் எடுத்துச் சென்று
பா.ஜ.க. தலைவர்கள் முன்னிலையிலேயே அடித்து நொறுக்கித் தரை
மட்டமாக்கினார்களே! அந்த பா.ஜ.க.வின் தலைவர் பயங்கரவாதம் பற்றிப் பேசத்
தகுதி உடையவர்தானா?

அந்தக் கொடுமைக்காக இதுவரை பகிரங்கமாக மன்னிப்பு கேட்டதுண்டா? மாறாக
நாங்கள் ஏன் மன்னிப்பு கேட்கவேண்டும்? என்று கொஞ்சம்கூட நாகரிகமின்றிக்
கொக்கரித்தவர் யார் தெரியுமா?

சென்னைப் பொதுக் கூட்டத்தில் பா.ஜ.க.வின் புதிய தலைவர் நிதின் கட்காரி,
தமது வழிகாட்டிகள் என்று கூறிய தலைவர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ள
சாட்சாத் அதே அத்வானிதான்.

அது போகட்டும்! காலங்கடந்தாவது புதிய தலைவர் பாபர் மசூதி இடிப்புக்கு
இப்பொழுதாவது பகிரங்க மன்னிப்புக் கேட்கத் தயாரா? அப்படி மன்னிப்புக்
கேட்டுவிட்டு, பயங்கரவாதம்பற்றிப் பேச ஆரம்பிக்கட்டும்.

அப்படி அவர் மன்னிப்பு கேட்டால், மறுகணமே அவர் பதவியை ஆர்.எஸ்.எஸ்.
பறிமுதல் செய்து விடும் என்பது அவருக்கே தெரியுமே!

---------------"விடுதலை” தலையங்கம் 13-4-2010

0 கருத்துகள்:

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP